சென்னை: மலையில் செல்பி எடுத்த சிறுவன், அருவியில் வீடியோ கால் பேசிய வாலிபர் தவறி விழுந்து பலியாகினர். நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹாதி. இவரது மகன் அப்துல் ஆசிக் (13). 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நண்பர்களுடன் குன்னூர் அருகே எக்கோ ராக் மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அப்துல் ஆசிக் மலையில் இருந்து தவறி 1000 அடி பள்ளத்தில் விழுந்ததாக தெரிகிறது. நண்பர்களால் அவரை மீட்க முடியாததால் வீட்டிற்கு திரும்பினர். அவரது பெற்றோரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் மகன் இரவு வரை திரும்பி வராததால் அப்துல் ஆசிக்கின் பெற்றோர் மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தனர். கடைசியாக நண்பர்களுடன் சென்றது தெரியவரவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மலையில் இருந்து தவறி விழுந்ததுபற்றி கூறியுள்ளனர். தொடர்ந்து எக்கோ ராக் பகுதிக்கு குன்னூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சென்று 1000 அடி பள்ளத்தில் இறந்து கிடந்த சிறுவன் உடலை மீட்டனர். செல்பி எடுக்கும்போது சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லிமலை: திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (22), நேற்று முன்தினம் நண்பர்கள் 6 பேருடன் டூவீலரில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளார். மாசிலா அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், எரசநாடிப்பட்டிக்கு சென்று மாசிலா அருவியின் மேல்பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று, குளித்துள்ளனர். குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக, ஊரில் உள்ள நண்பர்களிடம் பேசியுள்ளார். திடீரென திரும்பியபோது, கால் வழுக்கி 70 அடி பள்ளத்தில் குணால் விழுந்தார். அருவிக்கு தண்ணீர் வரும் பாதையில் அடித்துவரப்பட்டு, அங்குள்ள செடியில் மாட்டிக்கொண்டார். தகவலறிந்து வாழவந்தி நாடு போலீசார் வந்து படுகாயமடைந்து செடிகளில் சிக்கி தவித்த குணாலை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.