செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் பனையூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதால் அப்பகுதியில் கூடுதலாக குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி 5வது வார்டில் பனையூர் பகுதி உள்ளது. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில், இரண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் இந்த வார்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
அதிலும் இதே வார்டில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதி, அப்பா சாய் தெரு மற்றும் முத்துமாரியம்மன் கோயில் தெரு ஆகிய மூன்று பகுதிகளும் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அந்நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மூன்று பகுதிக்கென தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க இப்பகுதியில் கூடுதலாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.