வேலூர்: அணைக்கட்டு அருகே காதல் திருமணத்தால் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, தண்ணீர், ரேஷன் ெபாருட்கள் வாங்கவும் தடை விதித்ததாக நடவடிக்கை கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அணைக்கட்டு தாலுகா வண்ணாந்தாங்கல், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி எனது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெண்வீட்டார் இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து இருவரையும் கண்டுப்பிடித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்தார்கள்.
பின்னர் நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தினர். அப்போது இளம்பெண் தன்னுடைய தாய், தந்தையுடன் சென்றுவிடுகிறேன் என கூறினார். இதையடுத்து இருவரையும் தனித்தனியாக அவர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 25ம் தேதி(நேற்று முன்தினம்) அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் ஊர்பக்கம் வரக்கூடாது. குடிக்க தண்ணீர் எடுக்க கூடாது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கூடாது. எங்கள் பிள்ளைகள் படிக்க அவர்கள் இருக்கும் இடத்திற்கும் பள்ளி கூடத்திற்கு வரக்கூடாது என முடிவு செய்து எங்களை கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர்.
இதற்காக எங்கள் கிராம ஊர் பெரியோர்கள் ஊர் கூட்டம் போட்டு எங்களை ஊரைவிட்டு வெளியே துரத்தி விட்டனர். நாங்கள் வசிக்க இடம் இல்லாமல் தவித்து கொண்டு இருக்கிறோம். எனவே எங்களுக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.