சென்னை: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் இதுவரை ஒரு டிஎம்சி கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் 19ம் தேதி வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது.
பின்னர் படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், தொடர்ந்து 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. தொடக்கத்தில் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடியாகவும் பின்னர் படிப்படியாக அதிகரித்து 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும், ஆந்திர பகுதியில் மழையின் காரணமாக கண்டலேறு அணையில் கிருஷ்ணா தண்ணீர் வினாடிக்கு 1400 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டது.
இதனால் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் 465 கன அடியாகவும், தற்போது 270 கன அடியாகவும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.