நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 11.5 அடியும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 7.5 அடியும் உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசத்தின் நீர் இருப்பு இன்று காலை 89.15 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக இன்று மாலைக்குள் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு 81.70 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 105.97 அடியாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் 94.50 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 11 1/2 அடி உயர்ந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை புறநகர் பகுதிகளான சேரன்மகாதேவி, கன்னடியன், களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு, பாபநாசத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறில் 23 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி, பாவூர்சத்திரம், கடையம் மற்றும் ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று செங்கோட்டை மற்றும் புளியரை பகுதிகளில் கனமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியதால் விஸ்வநாதபுரம் பகுதியில் தென்னை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளான கடனா அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தாலும், ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் கோவில் அணைகளின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையின் நீர்மட்டம் 40.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 8 1/2 அடி உயர்ந்து 51 அடியாகவும் உள்ளது.
இதேபோல் குண்டாறு அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 21.75 அடியாகவும், கருப்பாநதி அணை 10 அடி உயர்ந்து 34.12 அடியாகவும், அடவிநயினார் அணை 11 அடி உயர்ந்து 34.12 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் மற்றும் குண்டாறு அணை பகுதிகளில் தலா 36 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்கோட்டையில் 24 மில்லிமீட்டரும், தென்காசியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் கனமழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஊத்து மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஊத்து பகுதியில் 46 மி.மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 40 மில்லி மீட்டரும் பதிவாகி இருந்தது. அதுபோல் பாபநாசத்தில் 39 மி.மீ, காக்காச்சியில் 32 மி.மீ. பதிவாகியது, மாஞ்சோலையில் 24 மி.மீ, மணிமுத்தாறில் 23.60 மில்லிமீட்டரும் பதிவானது.
மாவட்டத்தில் பதிவான மொத்த மழைப்பொழிவு 272.40 மி.மீ ஆகும். சராசரி மழைப்பொழிவாக 15.13 மி.மீ பதிவாகியுள்ளது.
பாளையங்கோட்டை, ராதாபுரம், நெல்லை, கன்னடியன் அணைக்கட்டு, களக்காடு, கொடுமுடியாறு அணை ஆகிய இடங்களிலும் லேசான மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல்லை, தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளையும் தண்ணீர் அதிகமாக விழுவதாலும் தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலையில் விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
நெல்லை மாவட்டத்தில் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக, கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.