அரூர்: பாசன தேவைகளை பூர்த்தி செய்ய, இருமத்தூர் ஆற்றில் இருந்து கொன்றம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், இருமத்தூர் தென்பெண்ணையாற்றில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. மழை காலங்களிலும், கேஆர்பி அணை திறக்கப்படும் போது ஆற்றில், அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இருமத்தூர், அனுமன்தீர்த்தம், அம்மாபேட்டை வழியாக சாத்தனூர் அணைக்கு சென்று கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை, இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கம்பைநல்லூர் அருகே உள்ள கொன்றம்பட்டி ஏரி, தென்பெண்ணை ஆற்றிலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால் அந்த ஏரி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. அதிக மழை பெய்தும், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள ஏரிகளுக்கு, அங்கிருந்து நீர்நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.