துஷான்பே: தண்ணீரை ஆயுதமாக்கியதாக புகார் கூறிய பாகிஸ்தானுக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,’ சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் இந்தியா தண்ணீரை ஆயுதமாக மாற்றி உள்ளது’ என்று குற்றம் சாட்டினார். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதற்கு நேற்று பதிலடி கொடுத்தார்.
அவர் கூறுகையில்,’பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த மன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும், மன்றத்தின் எல்லைக்குள் வராத பிரச்னைகள் குறித்து தேவையற்ற குறிப்புகளைக் கொண்டுவருவதற்கும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை கண்டு நாங்கள் திகைக்கிறோம். அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தானின் இடைவிடாத எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்திக் கொள்ளும் திறனில் தலையிடுகிறது. ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், ஒப்பந்தத்தை மீறியதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்றார்.