திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொய்யா சாகுபடி படு ஃபேமஸ். தற்போது கொய்யாவைத் தொடர்ந்து வாட்டர் ஆப்பிள் சாகுபடியும் இந்தப் பகுதிகளில் பிரபலமாகி வருகிறது. பல விவசாயிகள் இப்பகுதிகளில் தனிப்பயிராகவும், கொய்யாவில் ஊடுபயிராகவும் வாட்டர் ஆப்பிளை சாகுபடி செய்து வருகிறார்கள். பழனிக்கு அருகாமையில் உள்ள பழைய ஆயக்குடியைச் சேர்ந்த காமராஜ் தனது 1200 கொய்யா மரங்களுக்கு இடையே வாட்டர் ஆப்பிளை சாகுபடி செய்து தற்போது சுவையான பழங்களை அறுவடை செய்துகொண்டிருக்கிறார். அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.“ கடந்த 40 வருடங்களாக கொய்யா சாகுபடி செய்து கோயம்புத்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா வரை விற்பனை செய்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பரின் தோட்டத்திற்கு போனபோது, அங்கே வாட்டர் ஆப்பிள் மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து இருந்தது. எனது நண்பர் எனக்கு சில பழங்களைப் பறித்து சாப்பிடக் கொடுத்தார். பார்ப்பதற்கு அழகாக இருந்த வாட்டர் ஆப்பிள் சாப்பிடுவதற்கு படு சுவையாக இருந்தது. அன்றே முடிவெடுத்துவிட்டேன். நமது தோட்டத்திலும் இந்த வாட்டர் ஆப்பிளை பயிரிட வேண்டும் என்று.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் வாட்டர் ஆப்பிள் கன்று இருப்பது தெரிந்து அதனை வாங்கச் சென்றேன். ஒரு கன்று ரூ.90 வீதம் 300 வாட்டர் ஆப்பிள் கன்றுகளை வாங்கி வந்து எனது கொய்யாத் தோட்டத்தில் ஊடுபயிராக நடத் தொடங்கினேன். தற்போது அந்த 300 கன்றுகளில் 200 கன்றுகள்தான் வளர்ந்து பலன் தருகிறது. நான் வாட்டர் ஆப்பிள் கன்றுகள் வாங்கத் தொடங்கும் போதே எங்கள் பகுதியில் பலரும் என்னைப் போலவே இந்த வாட்டர் ஆப்பிள் சாகுபடியைத் தொடங்கி இருந்தார்கள். நான் இந்தக் கன்றுகளை நட்டதோடு சரி. இதுவரை தண்ணீர் மட்டும்தான் கொடுத்து வருகிறேன். உரமாக என்ன கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. இதுவரை எந்த உரமும் கொடுக்கவில்லை. ஆனாலும் வாட்டர் ஆப்பிள் நல்ல முறையில் காய்க்கத் தொடங்கி இருக்கிறது. கன்று நட்டதில் இருந்து ஒரு வருடத்தில் வாட்டர் ஆப்பிள் செடிகள் 4 அடி வரை வளர்ந்திருக்கும். அடுத்த வருடத்தில் 7 அடி வரை வளர்ந்திருக்கும். தற்போது நான் எனது தோட்டத்தில் இந்தக் கன்று களை நட்டு இரண்டரை வருடம் ஆகிறது. 9 அடி வரை வாட்டர் ஆப்பிள் மரம் வளர்ந்திருக்கிறது. இந்த 9 அடி மரத்தில் இருந்தே வாட்டர் ஆப்பிள் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கிறது. வருடத்திற்கு இரண்டு முறை மகசூல் தரும் இந்த வாட்டர் ஆப்பிளுக்கு இந்த மாதமும் நல்ல சீசன்தான். பூ பூத்து 30 முதல் 40 நாட்களுக்குள் பழமாகிறது. சராசரியாக பார்த்தால் தற்போது எனது நிலத்தில் உள்ள ஒவ்வொரு மரத்திலும் தலா 100 கிலோ பழங்கள் வரை இருக்கின்றன.
இந்தப் பழங்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்கிறோம். கடைசி அறுவடையில் கூட 500 கிலோ பழங்கள் கிடைத்தது. இருந்தாலும், எங்களுக்கு எந்தளவு தேவை இருக்கிறதோ அந்தளவு மட்டும்தான் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகிறோம். இந்தப் பழத்தை கிலோ ரூ.75 என தற்போது விற்பனை செய்கிறோம். இங்கு அறுவடை செய்யப்படுகிற பழங்கள் அனைத்தும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 20 கிலோ கொண்ட 1 பெட்டி ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் செலவுகள் எனப் பார்த்தால் பழம் பறிக்க வருபவர்களுக்கு கூலி, பழங்கள் கொண்டுசெல்லும் வண்டி வாடகை என இருக்கிறது. இன்னும் முறையாக சரியான பராமரிப்பு செய்துவந்தால் நல்ல வருமானம் கிடைக்கும்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
காமராஜ்: 90801 91658
லாபம் உறுதி
தனது கொய்யாத் தோட்டத்தில் ஊடுபயிராக 200 வாட்டர் ஆப்பிள் பயிரிட்டிருக்கும் காமராஜ், ஒரு கிலோ பழத்தை வெளியூருக்கு ரூ.75க்கு விற்பனை செய்கிறார். உள்ளூரில் ரூ.60க்கு விற்பனை செய்கிறார். மரம் ஒன்றிற்கு 100 கிலோ வீதம் 200 மரத்தில் 20 டன் வரை வாட்டர் ஆப்பிள் மகசூல் கிடைக்கும். ஆனால் வவ்வால் மற்றும் குருவிகளின் தொல்லையால் பாதி பழங்கள் சேதமாகிறது. ஆனாலும், இந்த வாட்டர் ஆப்பிள் சாகுபடியின் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம் என உறுதிபடக் கூறுகிறார்.
ஸ்ரீபழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொய்யா சாகுபடி ஃபேமஸ் என்பது பலருக்குத் தெரியும். பழனி டூ திண்டுக்கல் நெடுஞ்சாலை ஓரங்களில் இந்தக் கொய்யா பழங்களோடு சேர்த்து தற்போது வாட்டர் ஆப்பிளும் விற்பனையில் களைகட்டுகிறது.