Sunday, September 24, 2023
Home » சிரமம் தரும் கர்ப்ப காலம் சிறப்பாய் கடக்க உதவும் தண்ணீர்!

சிரமம் தரும் கர்ப்ப காலம் சிறப்பாய் கடக்க உதவும் தண்ணீர்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

கரு உருவாவது முதல் குழந்தையை ஈன்றெடுப்பது வரை தாய் மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியுள்ள அனைவருமே குதூகலமாய் காத்துக்கொண்டிருப்பர். இருப்பினும் எல்லா உடல் மற்றும் மனச் சிக்கல்களையும் கர்ப்பிணித் தாய் மட்டுமே முழுதாய் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதனை பாசிட்டிவாக மாற்றிக்கொள்ள பிடித்த உணவுகளை உண்பது, கர்ப்ப கால வகுப்புகளுக்குச் செல்வது, மற்ற தாய்மார்களிடம் பேசி தம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது, மகிழ்ச்சிகளை பகிர்ந்துகொள்வது எனப் பல விஷயங்களை கர்ப்பிணிகள் செய்வர். அதில் புது வரவாக இப்போது நீச்சல்குளப் பயிற்சிகள் இடம்பெற்று வருகிறது.

வெளிநாடுகளில் இந்த முறை இயன்முறை மருத்துவம் நீண்ட வருடங்களாக இருந்தாலும், இந்தியாவில் சமீபமாகத்தான் அதுவும், மிகச் சிலர் மட்டுமே பயம் இல்லாமல் செய்வதாக உள்ளது. பல்வேறு பயன்களை பிரசவ காலத்தில் தந்து, குதூகலமாய் பிரசவத்தை எதிர்கொள்ள வழிசெய்யும் இந்த நீச்சல்குள பயிற்சிகளை இன்னும் அதிகமானவர்கள் செய்து பயன்பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் கட்டுரை.

கர்ப்ப கால சிக்கல்கள்…

* அதிக உடல் வலி.

* ஜீரண மண்டலம் பொறுமையாய் இயங்குவதால் ஏற்படும் பசியின்மை.

* எளிதில் களைப்படைவது.

* மன மாறுதல்களால் (Mood Swings) ஏற்படும் மன அழுத்தம் மற்றும் கோபம்.

* இடுப்பு, கால் மூட்டுகள் மற்றும் குதிகால் வலி.

இவை அனைத்தும் பொதுச் சிக்கல்கள் தானே தவிர ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வெவ்வேறு விதமான சிக்கல்கள் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் தண்ணீர்…?

* தண்ணீரில் நாம் கால்களை அசைக்கும்போது அதில் தடுப்பு விசை (Resistance force) உருவாகும். இதனால் தசைகளை எளிதில் உறுதியாகக் கொண்டு வரலாம்.

* தண்ணீரில் நேரம் செலவிடுவதால் மனம் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு இருக்கும்.

* தரையை விட தண்ணீரில் நேரம் செலவிடும் போது உடல் இலகுவாக (Relaxed) மாறும்.

* அதிக நேரம் தண்ணீரில் செலவிடுவதால் பசியின்மை போய் நல்ல பசி உண்டாகும். இதனால் முதல் மூன்று மாதத்தில் இருப்பவர்களுக்கு மசக்கையினால் வரும் தொல்லைகளுக்கு சற்று நிவாரணம் பெறலாம்.

* நீரில் இருக்கும் போது நம் உடல் எடை குறைந்து மிதப்பது போல (Buoyancy) உணர்வோம். இது நீரின் இயல்பு. எனவே, கர்ப்பிணிகள் நீரில் இலகுவாக உணர்வார்கள். அடி வயிற்றில் குடல், கருப்பை, சிறுநீர் பை என அனைத்தையும் தாங்கும் நங்கூரம் போன்ற தசை படர்வு (Pelvic Floor Muscles) இருக்கும். கருப்பையின் முழு பாரமும் இந்த தசைகள் சுமப்பதால் தண்ணீரில் பாரம் குறைந்து சிரமம் இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

* ஐந்து மாதங்களுக்கு மேல் இடுப்பு மற்றும் கால் எலும்புகளில் தொடர்ந்து அதிக எடையை சுமக்கவேண்டி இருக்கும் (அதாவது, நம் சாதாரண உடல் எடை + குழந்தையின் எடை + நஞ்சுக் கொடியின் எடை + கர்ப்ப காலத்தில் உயரும் உடல் எடை). எனவே, தண்ணீரில் எடை குறைவது போல் நாம் உணர்வதால் இடுப்பு மற்றும் கால் மூட்டுகள், ஜவ்வுகள் இலகுவாக இருக்கும்.

* குதிப்பது, தன் உடல் எடையை மட்டும் வைத்து பயிற்சிகள் செய்வது (Body Weight Exercises), ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை தரையில் செய்யும் போது அதிக ஆற்றலுடன் செய்ய வேண்டும். இதனால் எளிதில் தசைகள் அலுத்துவிடும். ஆனால் தண்ணீரில் சுலபமாக செய்யலாம்.

* கர்ப்பிணிகளுக்கு கால், கைகள் வீங்குவது இயல்பு. எனவே தண்ணீரின் அழுத்தத்தினால் (Hydrostatic Pressure) நடக்கும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனால் கால், கைகள் வீக்கத்தினை தடுக்கலாம்.

* தண்ணீரில் எளிதாய் இடுப்பை சுற்றியுள்ள தசைகளை உறுதியாக மாற்றலாம் என்பதால், சுகப் பிரசவம் ஆக பெரும் உதவியாக இருக்கும்.

* தரையை விட தண்ணீரில் கர்ப்பிணிகள் நடக்கும்போது, நேரம் செலவிடும் போது மன அழுத்தம், உடல் அசௌகரியம் குறைந்து சீரான நீண்ட உறக்கத்தினை பெறலாம்.

எந்தெந்த மாதத்திலிருந்து…?

* முதல் மாதம் தொடங்கி பத்தாம் மாதம் வரையில் எந்த மாதத்திலும் தொடங்கலாம்.

* அதிலும் குறிப்பாக ஆறு மாதங்களுக்கு மேல் குழந்தையினால் அம்மா பேசுவதை கேட்கவும், வயிற்றின் மீது நாம் கை வைத்தால் குழந்தையால் அதை உணரவும் முடியும் என்பதால், இதமான சூடு அல்லது குளிர்ந்த தண்ணீரில் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யும்போது அதனால் கிடைக்கக்கூடிய பயன் குழந்தைகளுக்கும் சேரும்.

* அதேபோல, ஆறு மாதங்களுக்கு மேல்தான் வயிற்றின் எடை அதிகமாகிக் கொண்டு போகும் என்பதால், அந்நேரத்தில் தோன்றும் சிரமங்களை போக்க சிறந்த வழியாக இருக்கும்.

செய்ய வேண்டியவையும், வேண்டாதவையும்…

* இயல்பாகவே தண்ணீரில் அதிக நேரம் செலவிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். கூடவே, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹார்மோன்களின் மாற்றங்களால் அடிக்கடி சிறுநீர் பிரியும். எனவே, உடலில் இயல்பான தண்ணீர் அளவு இல்லாமல் (Dehydration) போகும் என்பதால், தண்ணீரில் இருக்கும் போது அடிக்கடி சிறிதளவு தண்ணீர் பருக வேண்டும்.

* குறைந்த சர்க்கரை அளவு இருப்பவர்கள், அடிக்கடி மயக்கம் வரும் கர்ப்பிணிகள் தங்கள் அருகில் உடனடி ஆற்றல் தரக்கூடிய பானம், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளை வைத்திருத்தல் அவசியம்.

* கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் தங்கள் மகப்பேறு மருத்துவருடன் ஆலோசித்தப் பின் தொடங்கலாம்.

* நஞ்சுக் கொடி இறக்கம், அவ்வப்போது ரத்தம் கசிவது (Spotting) போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு ‘படுக்கை ஓய்வில்’ (Bed Rest) இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவர்கள். எனவே, இவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

இயன்முறை மருத்துவம்…

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களின் உடல்நிலையும், தசை வலிமையும் மாறுபடும் என்பதால், அவற்றை இயன்முறை மருத்துவர் முழுதாகப் பரிசோதித்து, அவரவர்களுக்கு ஏற்ப உடற் பயிற்சிகளை பரிந்துரைத்து அவற்றை கற்றும் கொடுப்பர்.

ஒருவேளை, உடற் பயிற்சி செய்ய விரும்பாதவர்கள் இயன்முறை மருத்துவர் ஆலோசனைப்படி எவ்வளவு நேரம் தண்ணீரில் நடைப்பயிற்சி செய்யலாம் போன்றவற்றை கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படி செய்யவேண்டியது அவசியம். மொத்தத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பல உடல் மற்றும் மன சிரமங்களை கடந்துதான் பத்து மாதத்தினை நிறைவு செய்ய முடியும் என்பதால், அதற்கு உறுதுணையாக இருக்கும் இந்தத் ‘தண்ணீர் இயன்முறை மருத்துவத்தை’ பயன்படுத்தி, இன்னும் இன்னும் இன்பமாய், ஆரோக்கியமாய் நம் குழந்தைகளை ஈன்றெடுக்கலாம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?