*‘செல்பி’ எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி : தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் தொடர்ந்து 6வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத ஏக்கத்தில் அருவியை பார்வையிட்டு செல்பி எடுத்து சென்றனர். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே துவங்கியது.
இதனால் குற்றாலத்தில் கடந்த 10 தினங்களாக இதமான சூழலுடன் சாரலும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 7 தினங்களாக வெயில் தலை காட்டாத அளவிற்கு வானம் எப்போதும் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. நேற்றும் வெயில் இல்லை. பகல் முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டது.
அவ்வப்போது சாரலும், இடையிடையே சற்று மழையும் பெய்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகள் ஒன்றாக இணைந்து ஒரே பிரிவாக தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏக்கத்துடன் பார்வையிட்டு செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்றும், நாளையும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடுமுறை முடிவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அருவிகளில் ஓரமாக குளிக்க அனுமதிக்க வேண்டுமென்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
தென்மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, செங்கல்தேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 26ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் தொடர் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கொட்டுவதால் 5வது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்க தடை நீடிக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.