மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிகிதா (48). பேராசிரியையான இவர், தனது தாயார் சிவகாமியுடன் (73) சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்தபோது, காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை திருடப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இவரது புகாரின்பேரில்தான் தனிப்படை போலீசார், கோயில் ஊழியர் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த பரபரப்பான சூழலில் புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு இருப்பதும், அஜித்குமார் மீது அவர் கொடுத்த புகார் பொய்யானது என்றும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. இது இவ்வழக்கு விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியையான நிகிதா, கடந்த 2010ம் ஆண்டில் அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தரமுடியும் எனக் கூறி பலரிடம் வசூலில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் பச்சக்கோப்பன்பட்டியைச் சேர்ந்த பலரிடம் ரூ.16 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்து உள்ளார். தலைமறைவான அவரை தேடி கண்டுபிடித்து பணத்தை கேட்டவர்களை மிரட்டியுள்ளார். இதனால் பணத்தை இழந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் உள்ளிட்டோர் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு நிகிதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனது வீட்டை, தனியார் கல்லூரியில் நிர்வாக மேலாளரான பாசிலுக்கு நிகிதா விற்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2010ம் ஆண்டு செக்கானூரணியை சேர்ந்த செல்வம் என்பவரிடம், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது.நிகிதா ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால், இவரது தற்போதைய புகாரின் உண்மைத்தன்மையை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கூறுகையில், ‘‘புகார்தாரரான நிகிதா ஒரு மூதாட்டியுடன் கோயிலுக்கு வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரால் நடந்து செல்ல முடியாது என்றும், அவருக்கு வீல் சேர் என்றும் அஜித்குமாரிடம் கூறியுள்ளார். வீல் சேர் கொண்டு வர வேண்டுமென்றால் ரூ.500 தர வேண்டுமென அஜித்குமார் கூறியதாகவும், ஆனால், தன்னால் 100 ரூபாய் மட்டுமே தர முடியும் என்றும் கூறி நிகிதா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் திட்டமிட்டு வேண்டுமென்றே அஜித்குமார் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்’’ என்றார்.