திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வழக்கில், 2வது நாளான நேற்று கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், காவலாளியின் தாய், தம்பியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு மாற்றக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
விசாரணை அறிக்கையை ஜூலை 8ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.இதன்படி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று முன்தினம் தனது விசாரணையை துவக்கினார். திருப்புவனத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு சென்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை மாவட்ட போலீசார் சார்பில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பணியில் இருந்த உதவியாளர் சத்தீஸ்வரன், கோயில் இணை ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரித்தார். முதல் நாளில் காலை 10 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்நிலையில், 2வது நாளான நேற்று கோயில் காவலர்களான பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார் மற்றும் கோயில் பாதுகாப்பு அலுவலரும், சிசிடிவி கண்காணிப்பாளருமான சீனிவாசன் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார்.
மேலும், கோயில் அறநிலையத்துறை அலுவலரான பெரியசாமி, தனிப்படையினர் தாக்கிய வீடியோவை பதிவு செய்த சக்தீஸ்வரன், கோயில் அலுவலரான பிரபு, மடப்புரம் கோயில் டிரைவர் கார்த்திக்ராஜா ஆகியோரை விசாரித்த நிலையில், அஜித்குமாரின் தாயார் மாலதி, தம்பி நவீன் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தார். இவர், விசாரணை முடிவில் தனது அறிக்கையை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்வார் என தெரிகிறது.
* நடந்த உண்மையை நீதிபதியிடம் விளக்கினேன்: அஜித்குமாரின் தாய் மாலதி
திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணைக்கு சென்ற பின்பு செய்தியாளர்களிடம் அஜித்குமாரின் தாய் மாலதி கூறுகையில், ‘‘மடப்புரம் கோயிலுக்கு காலை 8.30 மணிக்கு வேலைக்கு சென்ற அஜித்குமார் பிற்பகல் 3 மணி வரை வீட்டிற்கு வரவில்ைல. போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் பேரில் அங்கு சென்று என் மகனை சந்தித்தேன். மேல் சட்டை இல்லாமல் இருந்த மகனிடம் நகையை எடுத்திருந்தால் கொடுத்து விடு எனக் கூறியதற்கு, அம்மா நான் எடுக்கவில்லை என்று கூறினான். இதை நீதிபதியிடம் கூறினேன்.
விசாரணை செய்துவிட்டு அனுப்பி விடுவோம் என்று கூறித்தான் போலீசார் என்னை வெளியே செல்லுமாறு கூறினர். நடந்த விவரங்களை, உண்மைகளை நீதிபதி முன்பு எடுத்து கூறினேன். அஜித் வீட்ல என்னை கேட்காம 10 காசு கூட எடுக்க மாட்டான். ஆனா எப்படி அந்தம்மா காருக்குள்ள நகை இருக்குன்னு தெரிஞ்சு அவன் கிட்ட சாவியை கொடுப்பாங்க. அஜித்தை விசாரித்த மாதிரி அந்த நிகிதாவையும் சேர்த்து விசாரணை செய்திருக்க வேண்டும். அவன் தான் எடுத்திருக்க வேண்டும் என போலீசாரே முத்திரை குத்தி கூட்டிட்டு போனாங்க’’ என்றார்.
* அச்சுறுத்தல் இருப்பதாக சொன்னேன்: தம்பி நவீன்குமார்
அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் நீதிபதியிடம் விசாரணையில் கூறிய விவரங்களை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘போலீசார் விசாரணையில் நடந்தவைகளை ஒளிவுமறைவின்றி சொல்லுமாறு கூறினார். அந்த விவரங்களை நான் சொல்லச்சொல்ல டைப் அடித்தனர். அதை படித்துப் பார்த்து கையெழுத்திட்டேன். தைரியமாக இருக்கச் சொன்னார். அச்சுறுத்தல் இருப்பதாக சொன்னேன். விசாரணையின் மீது கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. இரண்டரை மணிநேரம் விசாரணை நடந்தது. கோயிலுக்கு முன்பு கடை வைத்துள்ள எனது உறவினரிடமும் விசாரித்து வருகின்றனர்’’ என்றார்.