புதுடெல்லி: காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநிலங்களில் போர் ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள ஒன்றிய அரசு வெளியிட்ட திடீர் உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாத முகாம்களை இந்தியா தகர்த்தது. இதனால் இந்தியா,பாக். இடையே 4 நாட்கள் போர் நடந்தது. மே 7ஆம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்த சூழலில் காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநிலங்களில் மீண்டும் இன்று போர் ஒத்திகை பயிற்சி நடத்த ஒன்றிய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பாக். எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்களிலும், எதிரி விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வான்வழித் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இன்று போர் ஒத்திகை பயிற்சி நடக்கிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகரில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று தீயணைப்பு சேவை மற்றும் ஊர்க்காவல்படை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.