சேலம்: நாகர்கோவிலில் இன்ஸ்டா பிரபலமான ஷகிலா பானு, ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டார். இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். எனினும் போலீசார் அவரை ைகது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் ஏற்காடு மலைப்பாதையில் எச்சரிக்கை பலகையை உடைத்து பட்டதாரி வாலிபர்கள் 5 பேர் ரீல்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை வாசஸ்தலத்தில் கடந்த வாரம் கோடை விழா மலர்கண்காட்சி நடந்தது.
இதற்காக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், மலைப்பாதை சாலையில் அங்குமிங்கும் டூவீலரை ஓட்டி, மற்ற வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்தனர். ஆபத்தான வீலிங் சாகசத்தை வீடியோவாக எடுத்த அவர்கள், மலைப்பாதை சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையை தூக்கி வீசுவது போன்றும் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கி வீசும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்ப சிவா என்ற ஐடி.யில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனை பார்த்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஏற்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவை வெளியிட்டவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பி.காம்., பி.எஸ்சி., பிஇ., பட்டதாரி இளைஞர்கள் எனத்தெரியவந்தது. இதுதொடர்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஆகாஷ் (21), ஆண்டிமடத்தை சேர்ந்த சிவா (23), பிரவீன் (21), உடையார்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (19), இளையூரை சேர்ந்த அரவிந்த் (21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து, வாலிபர்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர். இதைதொடர்ந்து மன்னிப்பு கேட்டு அவர்கள் வீடியோ வெளியிட்டனர்.