பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் மழை காலக்கட்டத்தில் அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதால், அந்நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து வறட்சியின் காரணமாக கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகளிகள் ஆற்றின் தடுப்பணை பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறங்கி குளித்தனர்.
தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் அவ்வப்போது விபரீத சம்பவம் நடந்தது. அசம்பாவிதனம் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதிப்பதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் எனவும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரத்துக்கு முன்பு சென்னையிலிருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் மூன்று பேர் தடுப்பணையில் மூழ்கி இறந்த சம்பவத்தையடுத்து, அழியாற்று தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தவிர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, தடுப்பணை செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஊழிர்கள் நின்று, அங்கு வந்த சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தடையை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தடுப்பணை பகுதி மட்டுமின்றி, வால்பாறை ரோடு ஆழியார் அறிவுத்திருக்கோயில் எதிரேயும், அணைப்பகுதியில் என 6 இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வாசகத்தில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டன. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளிப்பதை தடுக்க போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக, ஆழியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் பலர் குறுக்கு பாதையில் செல்ல முயன்றனர்.
அங்கு போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்ததுடன், அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு கண்காணிப்பு பணியில் நின்ற போலீசார், தடையை மீறி சென்றால் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ஏமாற்றத்தில் திரும்பினர்.