பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 62 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. வார்னர், மார்ஷ் இணைந்து ஆஸி.இன்னிங்சை தொடங்கினர். ஷாகீன் அப்ரிடி துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்தாலும், மற்ற பவுலர்களை ஆஸி. தொடக்க ஜோடி அடித்து துவைத்தது. குறிப்பாக… ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, உசாமா மிர் ரன்களை வாரி வழங்கினர். வார்னர் 85 பந்தில் சதம் அடிக்க, மார்ஷ் சரியாக 100 பந்தில் 100 ரன் எடுத்தார்.
தொடர்ந்து பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட இருவரும், முதல் விக்கெட்டுக்கு 33.5 ஓவரில் 259 ரன் சேர்த்து சாதனை படைத்தனர். ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடரில் 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. இலங்கையின் தில்ஷன் – தரங்கா ஜோடி 2011 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 282 ரன் சேர்த்து முதலிடத்தில் உள்ளனர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 200+ பார்ட்னர்ஷிப் அமைவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமல்ல… பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் வார்னர் தொடர்ச்சியாக 4வது சதம் உள்பட பல்வேறு சாதனைகள் நேற்று உடைத்து நொறுக்கப்பட்டன.
மார்ஷ் 121 ரன் (108 பந்து, 10 பவுண்டரி, 9 சிக்சர்), வார்னர் 163 ரன் (124 பந்து, 14 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் அப்ரிடி, ராவுப் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்த… ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 21, இங்லிஸ் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 10 ஓவரில் 1 மெய்டன் உள்பட 54 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். ஹரிஸ் ராவுப் 3, உசாமா மிர் 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் இணைந்து துரத்தலை தொடங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ஓவரில் 134 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ஷபிக் 64 ரன் (61 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), இமாம் உல் ஹக் 70 ரன் (71 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் 18 ரன், முகமது ரிஸ்வான் 46, சவுத் ஷகீல் 30, இப்திகார் அகமது 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தான் 45.3 ஓவரில் 305 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 4, ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ் தலா 2, ஸ்டார், ஹேசல்வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 62 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது.