டெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கத்திற்கு இடையேயான போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் இருந்து 256 பயணிகளுடன் 5வது விமானம் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. போர் மேகம் சூழ்ந்துள்ள இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் “ஆப்ரேஷன் அஜய்” திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி 4 கட்டங்களாக இஸ்ரேலில் இருந்து ஏற்கனவே 906 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேப்பாள நாட்டு குடிமக்களுடன் 5வது மீட்பு விமானம் இந்தியாவிற்கு வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகளை ஒன்றிய அமைச்சர் எல் முருகன் வரவேற்றார். இதையடுத்து மீட்கப்பட்ட 23 தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இஸ்ரேலில் இருந்த ஒவ்வொரு நொடியும் அச்ச உணர்விலேயே இருந்ததாக இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 1192 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து 5 தனி விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.