நெல்லை: ஈரான் அருகே கிஸ் தீவு உள்ளிட்ட தீவுகளில் நெல்லை மாவட்டம், உவரி பீச் காலனியைச் சேர்ந்த 36 பேர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த இனிகோ ஆகிய 37 மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
அந்த 37 மீனவர்களையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான அப்பாவுவிடம் நெல்லை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சபநாயகர் அப்பாவு, மீனவ பிரதிநிதிகள் நெல்லை கலெக்டர் சுகுமாரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் மீனவ பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து 37 மீனவர்களையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் சுகுமார் அயலகத் தமிழர் நலத்துறையின் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.