Saturday, June 14, 2025
Home செய்திகள் போர்ச்சூழலில் பிரியாணி, குவார்ட்டருடன் விருந்து வைத்த எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

போர்ச்சூழலில் பிரியாணி, குவார்ட்டருடன் விருந்து வைத்த எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by MuthuKumar

‘‘பிறந்த நாளில் பிரியாணி, குவார்ட்டர்னு இலைக்கட்சி தலைவரின் அன்புக்கட்டளையை மீறி உற்சாகத்தில் மிதந்தாங்களாமே நிர்வாகிகள்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘போர் சூழல் நிலவியபோது தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென இலைக்கட்சி தலைவர் கட்சியினருக்கு அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தார். அதிலும் ஒன்றியத்தை ஆளும் அரசின் போர்க்கால நடவடிக்கைக்கு துணை நிற்க வேண்டிய தருணம் இது என்பதால் கொண்டாட்டங்களை தவிர்த்திட வேண்டுமென ஆணையிட்டிருந்தார்.. ஆனால் கடல் ஊர் பெயர் கொண்ட மாவட்டத்தில் இலைகட்சியின் சிட்டிங் எம்எல்ஏக்களே தலைமையை மதிக்காமல் பிரியாணி, குவார்ட்டருடன் விருந்து வைத்து எடப்பாடியார் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி இருக்காங்க.. தலைக்கு இவ்வளவு என ‘ப’ விட்டமினும் வழங்கப்பட்டதால் கட்சியினர் ஆடிப்பாடி குஷியில் திளைத்தார்களாம்.. இதை அறிந்த தேசப் பற்றாளர்களும், தன்னார்வலர்களும், ெபாதுமக்களும் அந்த அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமான்னு முணுமுணுத்தபடி சென்றார்களாம்.. இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் தலைவரின் ஆணைமீறி இப்படிபட்ட கூத்துகள் அரங்கேறி இருக்கு.. தாமரையுடன் இலை ஒட்ட விருப்பமில்லாததால் தான் நிர்வாகிகள் தலைவரின் கட்டளையை மீறி இப்படி நடந்துகொண்டதாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கிளை கிளையாக வெட்ட பிளான் போட்டு வேலை செய்றது, மான்செஸ்டர் மாவட்டத்தில் இலைக்கும் பூவுக்கும் மோதலை பூதாகரமாக்க போகுதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் இலைக்கட்சி சறுகா உதிர்ந்துட்டு வருகிறதாம்.. ‘டாஸ்மாக் பார் நாயகர்’ என பேர் வாங்கி பல கோடி ரூபாய் சுருட்டி சொத்து குவித்து ரெய்டில் மாட்டி தவிக்கும் இலைக்கட்சி நிர்வாகி, கட்சியை கவனிப்பதில்லையாம்.. கடவுள் பெயரை அடைமொழி கொண்ட இவரை நம்பி அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ‘மாஜி’ சென்னையில் டேரா போட்டு உட்கார்ந்து விட்டாராம்.. இனி மாவட்டத்தை நான் கவனிக்க முடியாது. சென்னையில் தலைமையிடத்து பாலிடிக்ஸ் லாபி ரொம்ப அதிகமாக இருக்கு.. எல்லாம் நான்தான் பாக்கணும், அதனால் மாவட்டத்தை நீங்க கவனிச்சுக்குங்க, அடுத்த எலக்‌ஷன்ல வழக்கத்தைவிட அதிகமாக ஓட்டு வாங்கி ஜெயிக்கணும், பூத் கமிட்டியை ஸ்டிராங்க் பண்ணுங்க என பொறுப்பை தூக்கி தந்துட்டாராம்.. ஆனா டாஸ்மாக் நாயகர் சுணங்கிப்போய் இருக்கிறாராம்.. வயசாகி போச்சு, இனி ஓடியாடி வேலை செய்ய முடியாதுன்னு அவர் அசால்டா இருக்கிறாராம்.. இவர நம்பி பயனில்லைன்னு சிலர் கட்சியைவிட்டு போக போறதா பேசிக்கிறாங்க.. இந்த நிலையில் ஒரு குரூப் டாஸ்மாக் நாயகரை தூக்கிட்டு சிங்காநல்லூர் ரியல் எஸ்டேட் பிரமுகரை பொறுப்புக்கு ெகாண்டு வாங்கன்னு சொல்றாங்களாம்.. கட்சி நிர்வாகிகளை மாத்துறதா, பூத் கமிட்டியை ரெடி பண்றதா என ‘மாஜி’ குழப்பத்துல இருக்கிறாராம்.. இந்த கேப்புல மலராத கட்சிக்காரங்க, மான்செஸ்டர் இனி எங்களுக்குத்தான் என பில்டப் பண்றாங்களாம்.. வர்ற தேர்தல்ல 3 சீட் கேரண்டியா வாங்கணும்னு, இலைக்கட்சியை கிளை கிளையா வெட்டணும்னு பிளான் பண்ணி வேலை செய்யறாங்களாம்.. இதனால் இலைக்கும், பூவுக்கும் மோதல் பூதாகரமாக போகுதுன்னு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியல் ரீதியாக விரைவில் முக்கிய முடிவு எடுத்தால்தான் நிர்வாகிகளை தக்க வைக்க முடியும் என தேனிக்காரருக்கு அழுத்தம் கொடுக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் மீண்டும் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் தேனிக்காரர் மற்றும் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் ஆசையில் இருந்தார்களாம்.. பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்தும், இலை கட்சியில் மீண்டும் அவர்களால் இணைய முடியவில்லை.. தற்போது, இலை கட்சி அமைத்துள்ள கூட்டணியில் தேனிக்காரரும் இருக்கிறார்.. எனவே அரசியல் ரீதியாக ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என தேனிக்காரருக்கு அவரது நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.. முக்கியமாக, டெல்டாவில் உள்ள அவரது முக்கிய ஆதரவாளர் ஒருவர், அதிரடி முடிவை எடுத்தால் நான், நம்மிடம் உள்ளவர்களை தக்க வைக்க முடியும், இல்லாவிட்டால், சிக்கல் ஏற்பட்டு விடும் என தேனிக்காரரிடம் தெரிவித்தாராம்.. எனவே, விரைவில் அதிரடி இருந்தாலும் ஆச்சரியமில்லையாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காவல்துறை செய்தி ஏதும் இருக்கா..’’ என ஆவலுடன கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழக காவல்துறையில் ஐஜி, டிஐஜிக்கள் அளவில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாம். அதில் பல சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களும் அடங்குவார்களாம். அதோடு ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றமும் இருக்கும்னு சொல்றாங்க. அமைச்சர்களுக்கு எதிராக சில ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளார்களாம். அவர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகிறவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தகவல்களை கசிய விட்டு வருகிறார்களாம். அவர்கள் அடிக்கும் கொள்ளையை மறைக்கவே இதுபோல அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்களாம். இதனால் விரைவில் மாற்றம் இருக்கும்னு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முடிவுக்கு வராத தந்தை, மகன் மோதலால் அப்செட்டில் உள்ளார்களாமே கட்சிக்காரர்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புரம் பகுதியில் புத்தாண்டு பொதுக்குழு மேடையிலே தந்தை மகனுக்கு இடையே நடந்த மோதல் இன்னும் நீறுபுத்த நெருப்பாகவே உள்ளது. குடும்ப கட்சி முத்திரை வேண்டாமென மகன் எதிர்க்க, தந்தையும் அப்செட் ஆனதால் கட்சிக்குள் குழப்பம் நிலவி வந்தது. யார் தலைவர் என்ற மோதல் ஓரளவுக்கு அடங்கிய நிலையில் முழுநிலவு மாநாடுக்காக மீண்டும் சமரச வேலைகள் நடந்தது. அதிலும் முழு பலன் இல்லையாம். தோட்டத்தில் தந்தைக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டு வரும் ஜெயமானவர் பேரனை ஆதரித்து அவர் படத்தை போட்டு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தாராம். இதனால் காண்டான மகன் தரப்பு ஆதரவாளர்கள் பேரன், மற்றும் ஜெயமானவர் படத்தை போடாமல் நெடுஞ்சாலை முழுவதும் பேனர் வைத்துவிட்டார்கள். இதனால் மாநாடுக்கு முந்தைய நாள் கட்சிக்குள் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. உடனே களத்தில் குதித்த சீனியர் நிர்வாகி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதால் ஓரளவுக்கு மோதல் முடிவுக்கு வந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் லோக்கல் காக்கிகளும் பிரச்னைக்குரிய பேனர்களை உடனே அகற்றி நிலைமையை சமாளித்துள்ளனர். மாநாடு முடிந்தும் தந்தை மகன் மோதல் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi