ஐதராபாத்: இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள் மற்றும் சொத்துகளை பராமரிக்கும் அமைப்பாக வக்பு வாரியம் செயல்படுகிறது. தற்போது பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு வக்பு வாரியங்களுக்கான அதிகாரங்களை குறைக்க புதிய மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஐதராபாத் மக்களவை உறுப்பினருமான ஓவைசி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசி, “தனது இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்த நினைக்கும் ஒன்றிய பாஜ அரசு, ஆரம்பம் முதலே வக்பு வாரியங்கள், வக்பு வாரிய சொத்துகளுக்கு எதிராக உள்ளது. வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க நினைக்கும் பாஜ அரசின் முடிவு மதசுதந்திரத்துக்கு எதிரானது” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.