சென்னை: ஒன்றிய பாஜ அரசு கொண்டுவந்துள்ள, அரசமைப்பு விரோத வக்பு திருத்த மசோதாவை முழுவதுமாக திரும்பப் பெற வலியுறுத்தியும், வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மண்ணடியில் மாபெரும் வக்பு உரிமை பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது ரஷீத், மாவட்ட தலைவர்கள் முகமது இஸ்மாயில், பூட்டோ மைதீன், சீனி முகமது, ரசாக், செய்யது அகமது, நவ்ஃபீல், சாதிக் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர் எஸ்.ஹைதர் அலி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவர் பாத்திமா கனி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மாநில சிறப்பு தலைவர் கு.பாரதி சிறப்புரையாற்றினர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், “பாஜ அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா, வக்பு சொத்துகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். பாசிச பாஜ அரசின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகளிலிருந்து, கட்சி, அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, சிறுபான்மை சமூக மக்களை பாதுகாக்க கரம் கோர்த்திட வேண்டும். இந்த வக்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கைவிடும் வரை எஸ்டிபிஐ கட்சி மக்கள் திரள் போராட்டம் தொடரும்” என்றார்.