Thursday, September 19, 2024
Home » வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்: சீமான் கோரிக்கை

வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்: சீமான் கோரிக்கை

by Neethimaan

சென்னை: வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாகத் திரும்பப்பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு மக்களவையில் புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும்.

ஓர் இறையை ஏற்று, நபி வழி நின்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள், தாங்களாக விரும்பி இறை வழிபாட்டுப் பணிகளுக்கோ, அல்லது இறைவன் திருப்பெயரால் மக்கள் தொண்டு செய்வதற்கோ மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளே ‘வக்ஃப்’ என்பதாகும். இந்தியா என்றொரு நாடு விடுதலைப்பெற்று ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக இசுலாமியச் செல்வந்தர்கள் பெருமளவில் தானமாக அளித்த நிலங்களே வக்ஃப் நிலங்களாகும். அவை முழுக்க முழுக்க இசுலாமியப் பெருமக்களது இறை வணக்கப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நில உடைமைகளாகும். அவ்வாறு இசுலாமியச் செல்வந்தர்களால் இசுலாமிய இறைப்பணிக்காக வழங்கப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்க இசுலாமியச் சான்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள்தான் வக்ஃப் அமைப்புகள் ஆகும்.

இந்தியப் பெருநாடு விடுதலைப்பெற்ற பிறகு வக்ஃப் அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலமாக வக்ஃப் வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், நேர்மையாக நிர்வகிக்கவும் 1954ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 லட்சத்திற்கும் அதிகமான வக்ஃப் அறக்கட்டளைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த மாநில அரசின் கீழ் வக்ஃப் வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன.

மேலும், வக்ஃப் சட்டத்திலிருந்த குறைபாடுகளைக் களைவதற்காக ஏற்கனவே 1959, 1964, 1969, 1995ஆம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. இறுதியாக 2013ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தைப் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து, அதிலிருந்த ஒருசில குறைகளையும் நீக்கத்தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான வக்ஃப் சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், நாட்டு மக்களுக்குத் துளி நன்மையும் செய்யாத 10 ஆண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மெல்ல மெல்ல வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில், இந்து மதத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும்.

அதன்படி இசுலாமிய சமய சொத்துக்களைப் பாதுகாக்க முழுக்கவும் இசுலாமியர்கள் அங்கம் வகித்த வக்ஃபு வாரிய குழுக்களில், புதிதாக 2 மாற்று மதத்தினரை நியமிக்கவும், வக்ஃபு வாரிய நிலங்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்திருந்தால், அந்நிலங்களை ஆக்கிரமித்தவர்களே சொந்தமாக்கி பட்டா பெற்றுக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட 40 திருத்தங்களைக் கொண்டுவந்து வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களை முற்று முழுதாக நீர்த்துப்போகச்செய்ய பாஜக அரசு முயல்கிறது.

குடியுரிமை திருத்தச்சட்டத்தைத் தொடர்ந்து, இசுலாமியர்களை நிலமற்ற அகதிகளாக, நாடற்ற நாடோடிகளாக மாற்றவே புதிய வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் இசுலாமியர்களை இந்திய நாட்டிற்கு அந்நியமானவர்கள் என்று நிறுவத் துடித்த மதவாத பாஜக அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது இசுலாமிய சமயத்தவரிடம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் வக்ஃப் நிலங்களாகும். இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை மற்றும் தொடர்வண்டித்துறைக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு நிலமுடையவர்களை இந்த நாட்டிற்குத் தொடர்பில்லாதவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவே தான் சட்டத்தின் மூலம் அதை அபகரிக்க நினைக்கிறது பாசிச பாஜக அரசு.

வக்ஃபு வாரியம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் வக்ஃபு வாரியங்கள் உள்ளன. அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். வக்ஃபு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகள் தவறெனக் கருதினால் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடும் செய்ய முடியும். எனவே வக்ஃபு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதும், வக்ஃபு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற அதிகாரம் படைத்த தன்னாட்சி அமைப்பு போலவும் பாஜக பரப்புவது அனைத்தும் பச்சைப் பொய்யாகும். உண்மையில் வக்ஃபு சொத்துக்களால் பயனடைவது இசுலாமியர்கள் மட்டுமல்ல.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள வணிகக் கடைகள், மண்டபங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், மருத்துவ சேவைகள், அவசர ஊர்திகள், பேரிடர்காலத் துயர்துடைப்பு உதவிகள் என அனைத்தும் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல அதைவிட அதிகமாக இந்து மக்களுக்கும், ஏனைய மதத்தினருக்கும் உதவவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும். வக்ஃபு சட்டத்தில் குறைகள் உள்ளது என்றால் அதைக் கூற வேண்டியது இசுலாமியப் பெருமக்கள்தான். தங்களுக்கு இத்தகைய திருத்தங்கள் வேண்டும் என்று கேட்க உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். ஒரு சில இடங்களில் நடைபெற்ற தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க நினைப்பது என்ன நியாயம்? ஒரு இந்து மடத்தில் தவறு நடந்தால் ஒட்டுமொத்த இந்து மடங்களையும் பாஜக அரசு மூடிவிடுமா?

அல்லது மாற்று மதத்தினரை இந்து மடங்களில் நிர்வாகிகளாக நியமிக்கத்தான் அனுமதிக்குமா? நிர்வாகத்தில் ஊழல் என்பதற்காக சங்கரமடத்தையும், சிதம்பரம் கோயிலையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றால் அதனை பாஜக ஆதரிக்குமா? வக்ஃபு நிலங்களை ஆக்கிரமித்தவர்களே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் முடிவு, கோயில் நிலங்களுக்கும் பொருந்துமா? சச்சார் குழு கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகக் கூறும் பாஜக அரசு, இசுலாமியர் நலன் காக்க சச்சார் குழு கொடுத்த அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயாரா? என்ற கேள்விகளுக்கு பாஜக உரிய விளக்கமளிக்க வேண்டும்.

எனவே, நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி மேற்கொண்ட மதவெறுப்பு பரப்புரை எப்படி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதோ, அரசியல் லாபத்திற்காக பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ராமர் கோயில் பாஜகவிற்கு எப்படிப் பலன் தரவில்லையோ, அதுபோல எதிர்வரும் தேர்தல்களை மனதில்கொண்டு, இசுலாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான வக்ஃபு நிலங்களைப் பறிப்பதன் மூலம் இந்துக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்க முடியும் என்ற பாஜகவின் நம்பிக்கையும் பொய்த்துப் போவதோடு, ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

வக்ஃபு வாரிய திருத்தச்சட்ட வரைவினை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெறாவிட்டால், எப்படிக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இசுலாமியப் பெருமக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, எப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்தார்களோ, அப்படி இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் திரள் புரட்சி போராட்டங்களை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi