டெல்லி: வக்ஃப் உமீத் இணையதளத்தை உருவாக்கியது சட்ட விரோத நடவடிக்கை மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது ஆகும் என ஒன்றிய அரசுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
ஒன்றிய அரசின் சட்ட விரோத அறிவிப்பு
ஒன்றிய பாஜக ஃபாசிச அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்புச் சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் ‘வக்பு உமீத்’ என்ற இணைய தளத்தை தொடங்கி அதில் வக்புச் சொத்துக்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தி இருக்கிறது.
இது சட்ட விரோத நடவடிக்கை மட்டுமல்ல; உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதும் ஆகும்.
எனவே ஒன்றிய அரசின் சட்டவிரோத வேண்டுகோளை புறக்கணிக்குமாறு ஜமாத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.