நன்றி குங்குமம் தோழி
திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் அன்றைய நாளில் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் சிலவற்றை கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியம். திருமணத்திற்கு மூன்று மாதங்கள் முன்பே அவர்கள் தங்களின் சருமம் மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மூன்று மாதத்திலிருந்து முகூர்த்தம் வரை மணப்பெண்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வோம்.
சில வருடங்களுக்குமுன்பு வரை திருமணத்தன்றுதான் மணப்பெண் அலங்காரம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று திருமணத்திற்கு முன்பு மேக்கப் டெஸ்டிங்கில் துவங்கி அந்த நாள் வரை அவர்கள் தங்களின் சருமம் மட்டுமில்லாமல் உடல் முழுதும் அழகுபடுத்த துவங்கிவிடுகிறார்கள்.
3 மாதங்களுக்கு முன்…
இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தூக்க நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களும் வேலைக்கு செல்வதால், மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அது சருமத்தில் வெளிப்படுகிறது. அதனால் காலதாமதம் செய்யாமல் அவர்கள் தங்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். அதில் முதலாக, தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். அசைவ உணவுகள் உட்கொள்ளும் அளவினை குறைத்து, பச்சைக் காய்கறி, பழங்களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்த பிடித்த விஷயங்கள், தியானங்களில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.
சருமம் மேம்பட அதற்கான பராமரிப்பை வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். ஓட்ஸ், பால் பவுடர் இரண்டையும் சாத்துக்குடி சாறில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடல் முழுதும் பூசி 15 நிமிடங்கள் கழித்து விரல்களால் வட்ட வடிவ முறையில் மெதுவாக தேய்த்து, பின் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள டெட் செல்கள் நீங்கி சருமம் பளபளப்பாக மாறும். அழகு நிலையத்தில் சருமத்தின் பளபளப்பினை மேம்படுத்த பல தெரபி முறைகள் உள்ளன. அவற்றை அழகுக்கலை ஆலோசகரின் அறிவுரை பேரில் எடுத்துக் கொள்ளலாம். முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தலாம்.
சாதாரண சருமம் கொண்டவர்கள், ஸ்ட்ராபெர்ரி பழத்தை பிசைந்து அதனை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும். எண்ணெய் தன்மை சருமம் கொண்டவர்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சை சாற்றினை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவிவிட வேண்டும். சாத்துக்குடி சாற்றையும் பயன்படுத்தலாம்.
சந்தன பவுடரை பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை குறையும். அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இதனை பின்பற்றினால் போதும். எண்ணெய் தன்மை முழுதும் குறைந்ததும் இதனை நிறுத்திவிட வேண்டும்.
கூந்தல் பராமரிப்பும், மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம். கண்டிப்பாக கண்டிஷனர் போட வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும்.
பின்பு சூடான தண்ணீரில் ஒரு டர்கி டவலை நனைத்து நன்கு பிழிந்து கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். டவலில் உள்ள சூடு தணிந்த பிறகு மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு மூன்று முறை செய்து பிறகு ஷாம்பு போட்டு கழுவலாம். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும். கூந்தலில் பிரச்னைகள் இருந்தால் அழகு நிலையத்தில் அதற்கான ஆலோசனை பெறலாம்.
ஒரு மாதம் முன்…
சாதாரண சருமம் உள்ளவர்கள் நாமக்கட்டி, முல்தானிமெட்டி இரண்டையும் கலந்து முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முல்தானிமெட்டி மட்டும் பயன்படுத்தலாம்.
ஒரு வாரத்திற்கு முன்…
முகூர்த்தத்தன்று செய்யப்படும் முழுமையான அலங்காரத்தினை செய்து பார்க்க வேண்டும். அதில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதை சரி செய்து கொள்ள வேண்டும். தற்போது மணமகனும் இந்த அலங்காரத்தினை பார்த்து அவரின் விருப்பத்தையும் தெரிவிப்பதால், ஒரு வாரத்திற்கு முன் ஃபிரே வெட்டிங் மேக்கப் பார்ப்பது நல்லது.
மூன்று நாட்களுக்கு முன்…
பெடிக்யூர், மெனிக்யூர், வாக்சிங், ஃபேஷியல், பாடி டிரீட்மென்ட் மற்றும் மெகந்தி அனைத்தும் செய்யலாம். இவைகளை செய்துவிட்டால் அதற்கு பின் மணப்பெண் வெளியே வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்…
நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறு பருகி, நன்றாக தூங்கி ஓய்வெடுக்க வேண்டும்.
திருமணத்தன்று…
அவர்கள் ஏற்கனவே பல சருமப் பாதுகாப்பு முறைகள் மற்றும் மணப்பெண் அலங்காரம் குறித்து டிரையல் எடுத்து இருப்பதால், அன்று அவர்கள் பார்க்கவே மிகவும் அழகாகவும் ஜொலி ஜொலிப்புடன் தென்படுவார்கள்.
தொகுப்பு: நிஷா