பெர்லின்: பெர்லின் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று, சீன வீராங்கனை வாங் ஸிங்யு, ரஷ்யாவின் சாம்சனோவா அபாரமாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் மகளிர் மட்டுமே பங்கேற்கும் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிந்ததை அடுத்து, நேற்று முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இப்போட்டி ஒன்றில், சீன வீராங்கனை வாங் ஸிங்யு, ரஷ்யாவில் பிறந்து ஆஸ்திரேலியா அணிக்காக ஆடி வரும் டாரியா கசட்கினா மோதினர்.
போட்டியின் துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய சீன வீராங்கனை வாங், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய வாங், 2வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரஷ்யாவின் லியுட்மிலா டிமிட்ரீவ்னா சாம்சனோவா மோதினர். இப்போட்டியில் துடிப்புடன் ஆடிய ஒஸாகா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் விட்டுத் தராமல் கடுமையாக போராடியதால் டைபிரேக்கர் வரை சென்றது. கடைசியில், அந்த செட்டை, 7-6 (7-3) என்ற கணக்கில் சாம்சனோவா வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-4 என்ற கணக்கில் சாம்சனோவா எளிதில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற கணக்கில் வென்ற அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.