நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஒவ்வொருவரும் உடல் நலனை கட்டாயம் பேணி காக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப உலகில் வாகனங்கள் பெருகி விட்டன. அருகில் உள்ள கடைக்கு கூட டூவீலர் / காரில் செல்கிறோம். நடைப்பயிற்சி என்பதே வெகுவாக குறைந்து விட்டது. மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால், இளம்வயதிலேயே நீரிழிவு பிரச்னை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
சர்வதேச நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிகளவு நீரிழிவு நோயாளிகள் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரக்குறிப்பு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13 கோடி பேர் துவக்க நிலையில் உள்ளனர். வரும் 2030ம் ஆண்டுக்குள் நீரிழிவு பாதிப்பு தற்போது இருப்பதை விட, 2 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கை மேலும் மிரட்டுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவரின் முதல் அறிவுரையாக இருக்கும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடை, உடற்பயிற்சி செய்வது, அனைவருமே கண்டிப்பாக பின்பற்றவேண்டிய செயல்.
நன்கு தூங்கி எழுந்ததும் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இதன்மூலம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். உடலில் உள்ள செல்களின் இயக்கமும் சீராக இருக்கும். சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பதன்மூலம், உடலில் சுமார் 350 – 400 கலோரிகளை எரித்து விடமுடியும். 4 கி.மீ நடைப்பயணத்தில் அதிகபட்சமாக சுமார் 5 ஆயிரம் அடிகள் வரை நடக்கலாம். இது நடையின் வேகத்தை பொறுத்து மாறுபடும். தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் 50 வயதை தாண்டியவர்கள், இரவில் ஆழ்ந்து உறங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, ‘ஹெல்த் வாக் சாலை’ என்ற அற்புத திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் ஒரு சில ஆற்றோரங்களில் நடைப்பயிற்சி வசதி கொண்ட நவீன பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசின் ஹெல்த் வாக் சாலை திட்டமானது, மக்களுக்கு நடைப்பயிற்சியின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தும். இதற்காக சென்னையில் பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக உள்ள 8 கிமீ சாலை, ஹெல்த் வாக் சாலையாக அமைக்கப்பட உள்ளது.
வரும் நவம்பர் 4ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரிலும் ஹெல்த் வாக் சாலை திட்டத்தை சென்னையில் இருந்து துவக்குகிறார். மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் இந்த ஹெல்த் வாக் சாலை திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு, மருந்து, மாத்திரைகள் வீடு தேடி வருகின்றன. மேலும், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள், நவீன வசதிகள் என தமிழக அரசு தொடர்ந்து மக்கள் நலனை பேணும் நம்பர் – 1 அரசாக திகழ்கிறது.