வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்பட்டு வந்த நூலகம், தற்காலிகமாக பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் போரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பழமைவாய்ந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நூலகத்தின் கட்டிடம் முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழும் சூழலில் காணப்படுகிறது. மேலும் மழைகாலங்களில், நூலகம் முழுவதும் மழைநீர் ஒழுகும் நிலையில் காணப்படுவதால், நூலகத்துக்கு வருபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், தற்போது அருகாமையில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு நூலகம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அப்பகுதி புத்தக வாசிப்பாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து வாசிப்பாளர்கள் கூறுகையில், வாலாஜாபாத் நகர்புற பகுதியில் செயல்படும் இந்த நூலக கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், இங்கு பயில வரும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அருகாமையில் உள்ள பழைய பேரூராட்சி கட்டிடத்தில் தற்காலிகமாக நூலகம் செயல்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, பழமை வாய்ந்த நூலக கட்டிடத்தை அப்புறப்படுத்தி, புதிய அடிப்படை வசதிகள் வாய்ந்த புதிய நூலக கட்டிடத்தை அங்கு கட்டித்தர வேண்டும்.
ஏனெனில் வரும் எதிர்கால இளைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றிக்கொள்ள இங்குள்ள நூல்கள் பெரும் அளவில் உதவும். மேலும் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், வேலை வாய்ப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இங்குள்ள நூல்கள் பெறும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக நூலகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.