தேனி: வைகை அணையின் நீர்த்தேக்கத்தில் பிடிக்கும் மீன்களை தங்களுக்கு பாதியளவு வழங்க வலியுறுத்தி தண்ணீரில் இறங்கி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான வைகை அணையின் நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை சார்பில் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. கடந்த மாதம் வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கும் உரிமையை கோவையை சேர்ந்த தனி நபருக்கு டெண்டர் விட்டது, இதனால் மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் இது குறித்து ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வைகை அணை நீர்த்தேக்கத்தில் பிடிக்கும் மீன்களில் பத்தியை தங்களுக்கு வழங்க வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையின் நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை மூலம் முன்பு பிடிக்கப்பட்ட போது இருந்த நடைமுறையே தொடரவேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர். இதை அடுத்து ஆர்ப்பாட்டகாரர்களிடம் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீரிலிருந்து வெளியே வரவழைத்தனர்.