உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மகமதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டிட மராமத்து வேலைகளை பார்க்க இப்பள்ளியில் படித்த மாணவனின் தந்தையும், உத்தப்புரத்தை சேர்ந்த கட்டிட பணியாளருமான அழகுமுருகனிடம் தலைமை ஆசிரியர் தனபால் கூறியுள்ளார். மூன்று நாட்கள் பள்ளியில் உள்ள அனைத்து மராமத்து வேலைகளையும் பார்த்து முடித்த அழகுமுருகன், ‘எனக்கு கூலி வேண்டாம்.
இந்த பள்ளிக்காக இலவசமாக செய்கிறேன்’ என கூறியுள்ளார். தலைமையாசிரியர், வேலைக்கான கூலியை பெற்று கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தியபோது அழகுமுருகன், ‘இப்பள்ளி என் மகனுக்கு எவ்வளவோ செய்து உள்ளது. இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும்’ எனக் கூறி மீண்டும் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து அழகுமுருகன் கூறுகையில், ‘‘என் மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து விட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிஏ படிக்கிறார். எனது மகனின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்ய வேண்டும் என எண்ணினேன். அதனால் கூலி வாங்காமல் வேலை பார்த்தது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.