சென்னை: 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஆக.27ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் 15வது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி, நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆல்பி ஜான் வர்கீஸ், நிர்வாகத்தரப்பு குழு மற்றும் துணைக் குழு உறுப்பினர்கள், அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுவான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டங்களில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.