பெரம்பூர்: வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஒரு டன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின் (28). இவர் நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, ‘’தான் குடியிருக்கும் வீடு உரிமையாளர் ஏராளமான கட்டைகளை அடுக்கி வைத்துள்ளார். இது எனக்கு தொந்தரவாக உள்ளது’ என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் விரைந்து சென்று விசாரித்தபோது அந்த வீட்டில் உள்ள அட்டைப்பெட்டியில் நிறைய கட்டைகள் இருந்துள்ளது. அது அனைத்தும் செம்மரம் என்பது தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் இருந்து 960 கிலோ மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் 370 கிலோ புதிய செம்மரக்கட்டைகள் மீதி 590 கிலோ பழைய செம்மரக்கட்டைகள் என்பதும் தெரியவந்துள்ளது. செம்மரக் கட்டைகளை பதுக்கிவைத்திருந்த உரிமையாளர் முகமது ரசூல் (54) கைது செய்தனர். இவர் ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், ஈஸ்வர்யா ஆகியோரிடம் இருந்து செம்மர கட்டைகளை வாங்கி காரில் எடுத்து வந்து 15 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பதுக்கிவைத்திருந்து மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். முகமது ரசூல் மீது ஆந்திர மாநிலம் சித்தூரில் 3 செம்மரக் கட்டை வழக்கு உள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து 960கிலோ செம்மரத்தை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக முகமது ரசூலை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.