கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் சொரக்கொளத்தூரை சேர்ந்தவர் விசிக மாவட்ட பாசறை செயலர் காமராஜ்(60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவருக்கும் குடிநீர் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து சுமன் தரப்பினரை கைது செய்துள்ளனர். அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளனர்.
இந்நிலையில் காமராஜ் நேற்று காலை நாயுடு மங்கலம் கூட்டு சாலையில் டீ குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது நாயுடு மங்கலம் ரயில்வே கேட் அருகில் மறைந்திருந்த சுமன் ஆதரவாளர்கள் கோபி(29), பார்த்திபன்(25) உள்பட பலர் சுற்றிவளைத்து அவரை கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.கலசபாக்கம் போலீசார் காமராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழி யில் காமராஜ் உயிரிழந்தார்.