மனிதனின் முதல் இருசக்கர ஊர்தி மிதிவண்டியே. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மிதிவண்டி கட்டாயம் இருக்கும். மோட்டார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு மிதிவண்டியின் பயன்பாடு குறைந்து போனது. ஆனாலும் நீச்சலடிப்பதும், மிதிவண்டி ஓட்டுவதும் சிறந்த உடற்பயிற்சி என்பதால் பெருநகரங்களில் இப்போது பெரிய அளவில் மிதிவண்டி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.விருத்தாசலத்திலும் மிதிவண்டி குழு கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தினமும் காலை உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஓட்டுவது வழக்கம். இந்தக் குழுவில் மருத்துவர்கள், பொறியாளர்கள், பேருந்து உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், சுயதொழில் முனைவோர், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும் இவர்கள் 7.30 மணி அளவில் பயணத்தை நிறைவு செய்கின்றனர். இவர்கள் குழுவாக இணைந்து பயணிப்பதால் இவர்களிடையே ஒரு குழு மனப்பான்மை உண்டு. இவர்கள் இணைந்து ஒரு புலன் குழுவை உருவாக்கி உள்ளனர். நாளை எங்கு பயணம் செல்கிறோம், என்பதை முதல்நாள் திட்டமிட்டு குழுவில் பதிவிடுவது வழக்கம். மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ விடுமுறை நாட்களில் நீண்ட பயணத்தை மேற்கொள்வதுண்டு.
100 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை அந்த பயணம் நீளும். கங்கைகொண்ட சோழபுரம், ரஞ்சன்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் ,சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு இந்த குழுவினர் நெடும் பயணம் சென்று வந்துள்ளனர். உலக அளவில் மிதிவண்டி குழுக்கள் தங்கள் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பி.ஆர்.எம்.(BREVETS DE RANDONNEUR MONDIAUX) எனப்படும் மிதிவண்டி பயணத்தை நடத்திவருகின்றனர். கல்வி ஆண்டு, நிதியாண்டு போல மிதிவண்டி ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைகிறது. ஒரு மிதிவண்டி ஆண்டில் 200, 300, 400, 600 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொள்பவர்களை சூப்பர் ரேண்டனர், என்று அழைக்கின்றனர். இதனை சுருக்கமாக எஸ். ஆர். என்பார்கள். இதுபோல் எஸ். ஆர். பெற்றவர்கள் அயல்நாடுகளில் நடைபெறும் மிதிவண்டி பயணங்களில் கலந்துகொள்ளலாம். இக்குழுவின் உறுப்பினர் சித்த மருத்துவர் பார்த்திபன் பாரிஸ் சென்று 1200 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். ஓசூர் மிதிவண்டி நண்பர் செடி மகன் என்பவர் ஒவ்வொரு பயணத்திலும் மரக்கன்று நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனைப் பார்த்து எங்கள் குழு உறுப்பினர்களும் நாமும் ஏன் இது போல் செய்யக்கூடாது என்று திட்டமிட்டோம். கடந்த மே மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க வீராணம் ஏரிக்கரைக்கு சைக்கிள் பயணமாகச் சென்ற நாங்கள் ஏரிக்கரையில் அமைந்துள்ள கந்தகுமாரன் என்ற ஊரில் மகிழ மரக்கன்று ஒன்றை நட்டு அந்த ஊர் பெரியவர் ஒருவரிடம் அதற்கு நீரூற்றும் பொறுப்பினை ஒப்படைத்து வந்தோம்.
இப்படித்தான் தொடங்கியது இந்தப் பசுமைபயணம். இதனை நாம் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும் என்று உறுப்பினர்கள் முடிவு செய்து வாரம் ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்து அங்கு மரக்கன்று நடுவது என்று தீர்மானித்தோம். இந்த செயல்பாட்டைச் சமூக ஊடகங்களில் காணொளிக் காட்சிகளாகப் பதிவு செய்தப்போது இளம் தலைமுறையினர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பல இளைஞர்கள் தங்கள் ஊருக்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று இதுவரை கோட்டேரி, முதனை, நறுமணம், குப்பநத்தம், மன்னம்பாடி, சின்ன வடவாடி, விஜயமாநகரம், கோபாலபுரம், கம்மாபுரம், சத்தியவாடி, பரவளூர் ஆகிய ஊர்களில் ஆலமரம், அரசமரம், புங்கன் மரம், அத்திமரம், பாதாம் மரம் போன்ற நிழல் தரக்கூடிய மற்றும் பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளோம்.உடற்பயிற்சியோடு சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் இந்தப் பசுமைப் பயணம் பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பசுமைப் பயணம் அடுத்த தலைமுறையிலும் தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் குழு உறுப்பினர்கள் மருத்துவர் விஜய், ஆனந்தன், ஹசன், மருத்துவர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் குழந்தைகள் தன்வந்த், ரக்சனா , சோகா ஆகியோரை அழைத்து வருகின்றனர்.
இக்குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் குழந்தை மருத்துவர் விஜய் கூறும்போது,“ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்குக் கல்வி அறிவையும் , செல்வத்தையும் சேர்க்க ஓடும் வேளையில் நாளை அந்தக் குழந்தை அந்தச் செழிப்போடு, செவ்வாய்க் கிரகத்தில் வசிக்கப்போவதில்லை, இதே பூமியில் சுத்தமான காற்றோடுதான் வாழ வேண்டும் என்பதை மறந்து ஓடுகிறோம். சுயநலத்திலும் ஒரு பொதுநலம் போல சுயநலத்திற்காக மிதிவண்டி ஓட்டுதலோடு பொதுநலம் கருதி ஒரு மரக்கன்று வைக்கும் இந்த பசுமைப் பயணம் மென்மேலும் தொடர வேண்டும்”என்றார்.இக்குழுவின் இரும்பு மனிதர் பிரான்ஸ் நாட்டில் மிதிவண்டி ஓட்டிய சித்த மருத்துவர் பார்த்திபன்,“நமது குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பெரிய அளவிலான சொத்து நமது ஆரோக்கியம். அதுபோல நமது எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து நமது இந்த பூமியின் ஆரோக்கியம், அது மரத்தின் மூலம் கிடைக்கும்” என்றார்.இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹசன்,“அனைவருமே தங்களின் தேவைக்காக மரங்களை வெட்டுகிறோமே தவிர மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்’’ என்று எண்ணுவதில்லை. அந்த குறையை சரிசெய்கிறது இப்பயணம். வருங்காலத் தலைமுறை மகிழ்ச்சியாக வாழ நம்மால் இயன்ற சிறு முயற்சியில் ஈடுபடலாம் என்று தோன்றியதன் விளைவாக எங்கள் குழுவினர் இணைந்து இந்தப் பசுமை பயணத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றோம். எங்கள் குழுவின் உறுப்பினர் பொறியாளர் திலகர் இருபது மரக்கன்றுகளுக்கான தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நன்கொடை அளிக்க பல நண்பர்கள் தயாராக உள்ளனர். பள்ளி மாணவர்களையும் இந்தப் பசுமைப் பயணத்தில் இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைப் பயணம் நிச்சயம் பயன்படும், என்று நம்புகிறோம், என்றனர்.