சென்னை: வி.பி.சிங் சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர்; அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது ஆகும் என அன்புமணி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்தியதற்காக நாமும், நமது பல தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து அவரை வணங்குகிறேன்.
வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால், பெருந்தகை வி.பி.சிங் அவர்களோ சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர். அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது ஆகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தேசிய அளவில் அது சாத்தியமாவதற்கு மத்திய அரசு விரைவில் நடத்தவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வகை செய்யக்கூடும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு அது குறித்த பார்வையே இல்லாததால் அதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவரது ஆன்மா ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை திறக்க வகை செய்யட்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.