புதுடெல்லி: பீகாரில் வரும் அக்டோபரில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு,மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து கட்சிகள் கவலைகளை தெரிவித்து வந்த நிலையில், சிறப்பு திருத்தம் குறித்த முழு நடைமுறையையும் அரசியல் கட்சிகளிடம் விளக்கி, அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள அனைத்து குடிமகன்களையும் சேர்க்க வசதியாக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை, பீகாரில் சுமார் 7.90 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், வாக்குச்சாவடி படிவங்கள் நிரப்பப்பட்டு ஜூலை 25 ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த செயல்முறையை மேற்கொள்ளவும், வாக்காளர்களுக்கு உதவுவதற்கும் 4 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1, 2003 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ள வாக்காளர்கள், வாக்குச்சாவடியின் சாற்றுடன் கணக்கெடுப்பு படிவங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மூன்றாம் கட்டமாக படிவங்கள் அந்தந்த வாக்காளர் பதிவு அதிகாரிகள் அல்லது உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். கணக்கெடுப்பு படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. 4 வது கட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2 கோடி பேர் வாக்குரிமை பறிபோகும்
காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் அரசியலமைப்புச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும். ஜனநாயகத்திற்கும் வாக்காளர்களுக்கும் பணியாற்ற வேண்டுமே தவிர பா.ஜவுக்கு அடிமையாக அல்ல. ஒவ்வொரு இந்தியருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதை வேண்டுமென்றே குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது. நாட்டின் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இந்த ஆபத்து எதிர்க்கட்சிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ளது. இதுபற்றி புகார் அளிக்க சென்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்த பிறகு, நாங்கள் தவறான முகவரிக்குச் சென்றுவிட்டதாக உணர்ந்தோம். தேர்தல் ஆணையம் அதன் சொந்தக் கட்டிடத்தில் அமர வேண்டிய அவசியமில்லை. பாஜவுக்கு ஒரு பெரிய தலைமையகம் உள்ளது; அவர்கள் அங்கு ஒரு மாடியில் அமர்ந்து அமர வேண்டும். பீகார் தேர்தலுக்கு முன்பு செய்யப்படும் மிகப்பெரிய நடவடிக்கையால் அங்கு இரண்டு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்குரிமை இழக்க நேரிடும்’ என்றார்.