Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து தமிழகத்தில் 43 இடங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

* செல்வபெருந்தகை, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளதை கண்டித்து நேற்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 43 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வபெருந்தகை, வைகோ, திருமாவளவன், பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். அது மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொண்டு வந்துள்ளது.

இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும். தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002, 2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிட வேண்டும்.

தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்தும் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்பட 43 இடங்களில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையை பொறுத்தவரை 4 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், திராவிடர் கழக துணை தவைவர் கலிபூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன், டாக்டர் கனிமொழி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, காரப்பாக்கம் கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், காங்கிரஸ் துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஏ.ஷேக் முகமது அலி, திண்டுக்கல் ஐ.லியோனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எஸ்ஐஆர்க்கு எதிராக பதாகைகளை கையில் பிடித்தப்படி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சென்னை தென்மேற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு எம்எல்ஏ, திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன், எம்எல்ஏக்கள் டாக்டர் எழிலன், எம்.கே.மோகன், ஜெ.கருணாநிதி, மாவட்டச் செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன்மோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை கிழக்கு, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தங்­க­சாலை மணிக்­கூண்டு அரசு அச்சகம் அரு­கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில செய­லா­ளர் பெ.சண்­மு­கம், விசிக தலை­வர் திருமாவளவன் எம்பி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, சென்னை மாந­க­ராட்சி மேயர் பிரி­யா­, எம்பிக்கள் கலா­நிதி வீரா­சாமி, இரா.கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாய­கம் கவி, ஜோசப் சாமு­வேல், இ.பரந்­தா­மன், ஜெ.ஜெ.எபி­நே­சர், ஐட்­ரீம் ஆர்.மூர்த்தி, வெற்றி அழ­கன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘‘நிறுத்து நிறுத்து எஸ்ஐஆரை நிறுத்து, கைவிடு, கைவிடு எஸ்ஐஆரை கைவிடு, நீக்காதே நீக்காதே, தமிழர்கள் வாக்கை நீக்காதே, என் வாக்கு என் உரிமை” என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாதவரம் பஜார் தெருவில் திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், பகுதி செயலாளர்கள் துக்காராமன், புழல் நாராயணன், தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், அருள்தாசன், கருணாகரன், அற்புதராஜன், மண்டல குழுதலைவர் நந்தகோபால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இதில் திமுக முன்னணியினர், முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர். அவர்கள் எஸ்ஐஆருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.