சென்னை: வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, வாக்காளர் பட்டியலில் அந்த திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
இது, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது.
புதிய முறையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் இருக்கும். வாக்காளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களைப் பெறுவார்கள். இந்த நோக்கில், தேர்தல் ஆணையம் இசிஐநெட் (ECInet) எனும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட ஐ.டி தொகுதியை உருவாக்கியுள்ளது. தற்போதுள்ள முறையை மாற்றி, தபால் துறையின் பயன்பாட்டு இணையதள இடைமுகம் இசிஐநெட் உடன் இணைக்கப்படும். இதன் மூலம் சேவை வழங்கல் மேம்படுவதுடன், தரவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.