* தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்த சதி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. மகாராஷ்டிரா தேர்தலை போல் பீகார், அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு தேர்தல்களை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை திடீரென பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. பிரிவு 326ன் கீழ் வாக்காளராகும் தகுதி அடிப்படையில் இந்த திருத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒவ்வொரு தொகுதியிலும் இடம் பெற்ற சாதாரண குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதி பெற்றவர்கள் என்றும் தெரிவித்த தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது.
இந்த நடவடிக்கை மாநில அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை வேண்டுமென்றே அதிக அளவில் நீக்கும் அல்லது அதிக அளவில் சேர்க்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த புகாருக்கு மத்தியில் பீகார் தவிர அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் இதே போல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வங்கதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் மீது பல்வேறு மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கும், சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடையே சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால் தான் தேர்தல் முடிவுகள் மாறின.
மக்களவை தேர்தலில் வென்ற இந்தியா கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதே பாணியை பீகார் தேர்தலிலும் கடைபிடிக்க முயல்வதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது, நாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான தீர்வு என்ற பெயரில் மறைக்கப்பட்ட வஞ்சகமான மற்றும் சந்தேகத்திற்குரிய திட்டமாகும். அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அடையாள மற்றும் குடியிருப்பு ஆவணங்களைச் சரிபார்ப்பதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் பெரும் அபாயம் உள்ளது.
பீகாரில் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது. தற்போதைய வாக்காளர் பட்டியலை நிராகரித்து, முற்றிலும் புதிய பட்டியலை உருவாக்கும் தந்திரமாக இருக்கிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
பீகார் தேர்தலை போல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்குவங்கம், தமிழ்நாடு, அசாம் மாநிலங்களிலும் வெற்றி பெற தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு பா.ஜ சதி செய்வதாக திரிணாமுல் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
* தேர்தல் ஆணையம் சொல்லும் காரணம்
பீகாரில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்கள் இருக்கும் முன்பு ஏன் இந்த திருத்தப்பணி என்ற கேள்விக்கு, விரைவான நகரமயமாக்கல், அடிக்கடி இடம்பெயர்வு, இளம் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுதல், இறப்புகளைப் புகாரளிக்காதது மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களைச் சேர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும், ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கும் தீவிர வாக்காளர் திருத்தம் தேவைப்பட்டது. இந்த தீவிர வாக்காளர் திருத்தத்தின் போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLOக்கள்) வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் காரணம் தெரிவித்துள்ளது.
* மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
* 2019 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.98 கோடி. 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்துள்ளது.
* 2024 நவம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்த எண்ணிக்கை 9.70 கோடியாக உயர்ந்தது.
* ஐந்து ஆண்டுகளில் 31 லட்சம் வாக்காளர்களும், மக்களவை தேர்தலுக்கு பின்னர் ஐந்து மாதங்களில் 41 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர்.
* மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்ட 9.54 கோடி பேரை விட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9.70 கோடியாக இருந்தது.
* சட்டப்பேரவை தேர்தல் நடந்த அன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு 58.22 சதவீதமாக இருந்தது. மறுநாள் காலையில்தான் இறுதி வாக்குப்பதிவு 66.05 சதவீதமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
* திடீரென 7.83 சதவீத அதிகரிப்பு 76 லட்சம் வாக்காளர்களுக்குச் சமம் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
* பா.ஜ கூட்டணி வென்ற 85 தொகுதிகளில் 12,000 வாக்குச் சாவடிகளில் மட்டுமே புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
* சிக்கல் என்ன?
2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்படாத எந்தவொரு நபரும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நோக்கத்திற்காக, வாக்காளராக இருப்பதற்கான தகுதியை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு தகுதியுள்ள அரசாங்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
* வாக்காளர் பட்டியல் திருத்தமா? அல்லது என்ஆர்சியா?
2004 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள், குடியுரிமைக்கான சான்றாக பெற்றோரின் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்பது வாக்காளர்களுக்கு பிரச்னையான ஒன்று. இது வாக்காளர் பட்டியல் திருத்தமா அல்லது இது தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
* மேற்குவங்கத்தில் வெற்றி பெற பா.ஜவின் முயற்சி திரிணாமுல் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) பின்கதவு வழியாக கொண்டு வருவதற்கான ஒரு மோசமான நடவடிக்கை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ மேற்கு வங்கத்தில் வெற்றி பெற பாஜவின் தீவிர முயற்சி இது. பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள. இந்தியா முழுவதும் இந்த மாதிரியைகொண்டு வருவார்கள் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே குரலில் இதை எதிர்க்க வேண்டும்’ என்றார்.
* 1952 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் நடந்தாலும் கடந்த 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* பீகாரில் கடைசியாக தீவிரத் திருத்தம் 2003 ஆம் ஆண்டில் ஆணையத்தால் 01.01.2003 ஐ தகுதித் தேதியாகக் கொண்டு நடத்தப்பட்டது.
* எதற்காக இந்த நடவடிக்கை?
* சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கு வாக்காளர் பட்டியலின் நேர்மையை பராமரிப்பது அடிப்படையாகும்.
* தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதையும், தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தல்.
* தகுதியற்ற வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்தல்.
* இறந்த/மாற்றப்பட்ட/வராத வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல்.
* அரசியலமைப்பின் பிரிவு 326 தெரிவிப்பது என்ன?
அரசியலமைப்பு பிரிவு 326ன் படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த சட்டப்பிரிவின் படி இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொரு நபரும் 18 வயதுக்குக் குறையாதவராகவும், எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்படாதவராகவும் இருந்தால், அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய உரிமை உண்டு. அரசியலமைப்பின் பிரிவு 324 மற்றும் 1950 ஆம் ஆண்டு ஆர்பி சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.