*பாலக்காடு கலெக்டர் வேண்டுகோள்
பாலக்காடு : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 18 வயது நிரம்பிய இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என கலெக்டர் சித்ரா கேட்டுக்கொண்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாலக்காடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் சித்ரா பேசுகையில்:புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இவற்றில் முகவரி, வயது, தந்தை பெயர், வாக்குச்சாவடி மாற்றம் ஆகிய குறைபாடுகளை சரிசெய்ய வரும் டிசம்பர் 9 ம்தேதி வரை காலஅவகாசம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வரும் ஜனவரி 5 ம் தேதி இறுதி கட்ட வாக்காளர் பெயர் பட்டியல் வெளியீடு செய்யப்படவுள்ளது. பெயர் விடுபட்டவர்கள், மரணமடைந்தோர், புதிய வாக்காளர் சேர்க்கை ஆகியவற்றை சரிப்பார்க்க அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மாவட்டத்தில் இளைஞர் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு உள்ளது.இளைஞர்களும், 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கையில் இடம்பெறுவதற்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி இயந்திரங்களில் சரிப்பார்ப்பு நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் வாக்குச்சாவடிகள் 2,108 அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.