‘‘இலைக்கட்சி மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததில் தூங்கா நகரத்தின் இலைக்கட்சியின் மாஜிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்தான் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார்களாமே.. என்னா விஷயம்..’’ என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான்.. நொந்து போனதிலும் குறிப்பாக, என்ன கேள்வி வருமோ, சொல்லும் பதிலால் சிக்கல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் மீடியாவை சந்திக்கவே மிகத் தயங்குகிறார்களாம். ஒன்றிய உள்துறை ‘கூட்டணி ஆட்சி’தான் என்று தூங்கா நகரத்தில் வைத்தே திட்டவட்டமாக சொல்லி விட்டுச் சென்றும் கூட, இதுவரை தலைமை எந்தப் பதிலும் சொல்லாதது தொண்டர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது.
இதனால், தொண்டர்கள் முகத்தை பார்க்கவே மாஜிக்கள் திண்டாடுகிறார்களாம். இத்தோடு மலராத கட்சி மேற்புறமும், குன்றமும் விரும்பும் நிலையில், தங்கள் அடிவயிற்றிலேயே கை வைக்கிறதே என கனத்த வேதனையில் இத்தொகுதிகளின் சிட்டிங்களான தெர்மோகோல், செல்லமானவர் இருவரும் முடங்கிக் கிடக்கிறார்களாம். உதயமானவருக்கோ முரசுவிடம் இலைக்கட்சி ஒட்டினால் தன் தொகுதி மங்கலத்தை அவர்கள் தட்டிப் பறித்து, தனக்கு மங்கலம் பாடிவிடுவார்களே எனும் அச்சம் அதிகரித்திருக்கிறது. மலராக் கட்சியும் இந்த மங்கலத்திற்கு ஆசைப்படுகிறதாம்.
எனவே, புதிய கூட்டணிகளால் தங்கள் இருப்புகள் பறிபோய், வடபுறதை செல்லமானவர், தென்புறத்தை உதயமானவரோ, தெர்மோகோலோ போராடி வாங்கினாலும், புதிதாக அறிமுகமாகி ஆள்பிடித்து, செலவிட்டும் போட்டியில் ஜெயிக்க முடியாதே என்ற ஆதங்கமே இவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. நிர்ப்பந்தத்தால் மலராத கட்சியுடன் கூட்டணி வைத்து, இப்படி தூங்கா நகரத்துக்காரர்களின் தூக்கத்தைக் கெடுத்து நிற்க வைத்து விட்டதே தலைமை என இலைக் கட்சித்தொண்டர்களிடமும் ஆத்திரம் அதிகரித்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சியில் கோஷ்டி மோதல் கொடிகட்டிப் பறக்குதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் பாஜவில் கோஷ்டி பூசல் கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டதாக காவி தொண்டர்கள் புலம்புகின்றனர். மன்னர் மாவட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜ கட்சியை சேர்ந்த இரண்டு மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த புதிய தலைவர் மன்னர் மாவட்டத்திற்கு வந்தபோது கட்சியினருக்கு முறையான அழைப்பு இல்லையாம். இதனால் மன்னர் மாவட்டத்தில் பெரும் புகைச்சலே ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் விமர்சிக்கவும் செய்துள்ளனர்.
இந்நிலையில் புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு மன்னர் மாவட்ட பகுதிக்கு வரும்போது ஒரு சிலர் மட்டுமே வரவேற்க சென்றனர். பெருவாரியன பேர் கட்சி பணி செய்வதில்லை. நாம் பல காலம் கட்சியை காப்பாற்ற ஒன்றும் இல்லாமல் பாடுபட்டோம். புதியவருக்கு என்ன தெரியும். யாரை வேண்டுமானலும் வைத்து கட்சி நடத்தட்டும். இது குறித்து டெல்லி தலைமையிடம் புகார் தெரிவிப்போம் என்று பேசி வருகின்றனர். ஆக மொத்தத்தில் மன்னர் மாவட்ட பாஜவில் கோஷ்டி மோதல் கொடி கட்டி பறக்க தொடங்கிவிட்டது என்கின்றனர் காவி தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வசூல் அதிகாரிக்கு சோதனை மேல் சோதனையாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்தில் ஏற்கனவே மாவட்ட மேலாளராக இருந்த சுந்தரமான ஒரு அதிகாரி கடைகள் தோறும் மாதம் ரூ.40 ஆயிரம் என வசூலை வாரி குவித்தார். தனது சொந்த ஊரான ஈரோட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் காஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எங்கிருந்தாலும் வசூல் ஒன்றையே குறியாக கொண்ட அந்த அதிகாரி, அங்கும் பணிவிடுப்பு செய்யப்பட்ட பன்னீரான ஒரு சூப்பர்வைசரை கையில் வைத்து கொண்டு வருவாயை வாரி சுருட்டினார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க மண்டல அதிகாரிக்கும் பணமழையை கொட்டி நனைய வைத்தார். இந்நிலையில் பணி விடுப்பு செய்யப்பட்ட நபர் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு கிளம்பியதால், சுந்தர அதிகாரிக்கும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. மண்டல அதிகாரியோ, ‘கொடுத்த பணத்தை வேணுமானாலும் வாங்கிக்ேகா, நிர்வாகத்த நியாயமா நடத்து’ என கூச்சலிட, சுந்தர அதிகாரி இப்போது சுரத்தின்றி தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு ஊழியரை பலியாடாக்கிவிட்டு சோகமாக உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இளசுகளின் அட்ராசிட்டி அலப்பறை தாங்க முடியலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் மாவட்டத்தில் கண் ஆட்சிபுரம் என்ற பகுதி உள்ளது. இங்கு பள்ளி இளசுகளின் அட்ராசிட்டி அலப்பறை மக்களை முகம் சுளிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாம். அதாவது திருக்கோயில் ஊர் அமைந்துள்ள சாலையில் பஸ்களிலும், இருசக்கர வாகனத்திலும் செல்லும் இளசுகள் கூச்சலிட்டபடி பயணிக்கிறார்களாம். குழு குழுவாக டீம் போட்டு பயணிப்பதோடு அட்ராசிட்டி அலப்பறைகளில் ஈடுபடுவதிலும் குறைவில்லையாம். ஏற்கனவே கடந்தாண்டு இதேபோன்று பிரச்னை பூதாகரமாகி மக்களிடம் இருந்து புகார்கள் வர, பள்ளிக்கே சென்று பாடம் எடுத்தார்களாம் காக்கிகள்.
தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கி சில வாரங்களே ஆகும் நிலையில் மீண்டும் அட்டூழியம் அரங்கேறி வருகிறதாம். காக்கிகள் நடவடிக்கைக்கு தயாரானாலும் எதிர்கால நலன் கருதுவதால் தப்பும் இளசுகள், அதையே தங்களுக்கு சாதகமாக்கி தாறுமாறாக செயல்படுவதால் காக்கிகள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் இளசுகளின் எதிர்காலம் என்னவாகுமோ?என்ற அச்சத்தில் பெற்றோர்களும், உள்ளூவாசிகளும் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.