Thursday, July 17, 2025
Home செய்திகள்Banner News தொண்டர்களையும், மக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது.! அவதூறுகளைப் புறந்தள்ளுவதே என் பழக்கம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொண்டர்களையும், மக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது.! அவதூறுகளைப் புறந்தள்ளுவதே என் பழக்கம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Mahaprabhu

சென்னை: ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான பயணத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவினருக்கு கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர் – திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தில் ஒன்றான இரயில் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கைவிடக்கோரி பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுத்தேன்.

காட்பாடி தொகுதியின் தொடர் வெற்றி நாயகரும் அமைச்சருமான அண்ணன் துரைமுருகனுடன் அவரது சொந்த ஊருக்கு இரயிலில் பயணித்தேன். எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அளவற்ற அன்பைப் பொழியும் மக்களிடம், நான்காண்டுகாலக் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறேன். ஒரு சில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிப்பதைக் கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதைத்தான் முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம்.

காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம். திமுக அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கட்சித் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. கட்சியினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக என்னைச் சந்தித்து, தங்கள் மனதில் உள்ளதை என்னிடம் தெரிவிக்கலாம் என்ற உறுதியினை வழங்கியிருந்தேன். இதனைப் பொறுக்க முடியாத அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் இந்தச் சந்திப்பு குறித்த உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாக அள்ளித் தெளிக்கும் வேலையைச் செய்தார்கள்.

‘உடன்பிறப்பே வா’ எனும் கட்சி நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் நிர்வாகிகள் அறிவார்கள். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு கிள்ளை ரவீந்திரன் அந்த அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது. கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள். இந்த செயல்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – சார்பு அணிச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது.

ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கட்சிஉடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கட்சிஅரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன். தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் – அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் ஓரணியில் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi