Wednesday, June 25, 2025
Home மகளிர்நேர்காணல் ஃபினான்ஸியல் லிட்ரெஸியில் கலக்கும் VJ யுவராணி!

ஃபினான்ஸியல் லிட்ரெஸியில் கலக்கும் VJ யுவராணி!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கராய் இன்ஸ்டா பக்கத்தில் தொடங்கிய பயணம் இது. இன்று ஃபினான்ஸியல் எஜுகேட்டராக பிரபலம் அடைந்திருக்கிறேன்’’ என்கிற வீடியோ ஜாக்கி யுவராணி, சம்பாதிக்கின்ற பணத்தை எப்படி சேமிப்பது? எப்படி முதலீடு செய்வது? பட்ஜெட் செய்வது எப்படி? இன்சூரன்ஸ் செய்வது எப்படி? தேவைக்கு கடன் பெறுவது? கடனை எப்படி கையாளுவது? இன்வெஸ்மென்ட்… டாக்ஸ்… ரிட்டயர்மென்ட் பிளான் என எக்கச்சக்க விளக்கங்களோடு படபடவென பட்டாசாய், உற்சாகம் பொங்க “நான் உங்க யுவராணி” என பேச ஆரம்பிக்கும் போதே அந்த ஃபயர் நம்மிடமும் பற்றுகிறது.

‘‘முழுக்க முழுக்க இது என்னோட முயற்சிதான். பக்கத்து வீட்டுப் பொண்ணு சொல்லிக் கொடுக்குற மாதிரி, மக்கள் மனதிற்கு அருகாமையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுவேன். இதுதான் எனக்கான ப்ளஸ்’’ என்றவர், ‘‘வாய்ஸ் மாடுலேஷன் வழியாகவும் மக்கள் கவனத்தை நம் பக்கம் திருப்புவது ரொம்பவே முக்கியம்’’ என்றவர், ‘‘அந்தளவு மக்களுக்கான தகவல்களைத் தேடித்தேடி அப்டேட் செய்து கொண்டே இருக்கிறேன்’’ என்கிறார். ‘‘இதில் கன்டென்ட் செலக் ஷன், பிரசென்ட் செய்வது, ஷூட் செய்வது, எடிட்டிங், கேரக்டர்ஸ் செலக் ஷன் என அத்தனையும் என்னோட வேலை’’ என்றவரிடம், ஃபினான்ஸியல் எஜுகேட்டராக அவரின் பயணம் தொடங்கியது குறித்து கேட்டதில்…

‘‘எனக்கு ஊர் திருச்சி. நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் அங்குதான். ரொம்பவே ஏழ்மையான குடும்பம் என்னுது. கஷ்டப்பட்டுதான் ஜீவனம் செய்தோம். அப்பாவின் வருமானம் வீட்டிற்கு முழுமையாகக் கிடைக்காததால், வீட்டு செலவுகளை சமாளிக்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டார். என்னையும் சேர்த்து ஒரு அண்ணன், ஒரு தங்கை என நாங்கள் மூவர். அம்மா வழி பாட்டியும் தாத்தாவும் ஆதரவு தந்தார்கள்.

கடன் வாங்கி வாங்கி, வட்டி அதிகமாகவே, அடைக்கும் வழி தெரியாமல், நாங்கள் குடியிருந்த வீட்டை குறைந்த விலைக்கு விற்றோம். ஒருநாள் இரவாவது அழுகாமல் தூங்கிருவோமா என்கிற ஏக்கத்தோடுதான் எங்களின் இளமைப் பருவம் கழிந்தது’’ என தன் வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்தியவர் மேலும் விவரிக்க ஆரம்பித்தார்.‘‘+2வரை அரசு உதவிபெறும் பள்ளியில்தான் படித்தேன். படிப்பு எனக்கு நார்மலாகவே வந்தது. ஆனால் சின்ன வயதில் இருந்தே நடனம், நடிப்பு என படிப்பை தாண்டிய கலையார்வம் இருந்தது. நடனத்தை முறையாகக் கற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. வீட்டில் வசதி இல்லை என்பது மட்டும் என் மனதில் ஆழமாக பதிய, அப்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, 10 லட்சத்தை எப்படியாவது வென்று, வீட்டுக் கஷ்டத்தை தீர்க்கணும் என்றெல்லாம் நினைத்தேன்.

நன்றாகப் படித்து வேலைக்குப் போனால், நமது குடும்பத்தின் சூழலை மாற்றலாம் என்ற நம்பிக்கையில், அரசு ஒதுக்கீட்டில் இடம் பிடிக்க தீயாப் படிக்க ஆரம்பித்தேன். +2வில் நல்ல கட் ஆஃப் மார்க் வந்தது. சுற்றி இருந்தவர்கள் என்னை பொறியியல் படிக்க அறிவுறுத்த, திருச்சியின் பிரபல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. பொருளாதார நெருக்கடியால் அண்ணன் டிப்ளமோ படிக்க, வீட்டின் முதல் பட்டதாரி என்கிற பெருமையோடு நான்கு ஆண்டு படிப்பை ஆரம்பித்தேன்.

கல்லூரிக்குள் நுழைந்ததும், எனக்குள் இருந்த பாட்டு, நடனம், பேச்சுத் திறமை போன்ற கலை ஆர்வம் தோழிகள் மத்தியில் என்னைப் பிரபலப்படுத்த, ‘நீ ரொம்ப நல்லா பேசுற’ என பாராட்ட ஆரம்பித்தனர். இந்த நிலையில், ‘காற்றின் மொழி’ படம் ஏற்படுத்திய தாக்கத்தில், ரேடியோ ஜாக்கியாக மாறினால் நன்றாக இருக்குமே எனவும் யோசிக்க ஆரம்பித்தேன்.நாம் ஒன்றை நினைத்தால் அதுவாகவே மாற இந்த பிரபஞ்சம் (universe) நம்முடன் கை கோர்க்கும் என்கிற வார்த்தை மீது எனக்கு எப்போதும் அதீத நம்பிக்கை உண்டு. அப்போது திருச்சி சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜே.வுக்கான ஆடிஷன் நடந்துகொண்டு இருந்தது. முதல் இரண்டு ரவுண்டில் நான் தேர்வாகியும், மூன்றாவது ரவுண்டில் தேர்வாகவில்லை. ஆர்.ஜே. பணி குறித்த எந்த அடிப்படை புரிதலும் இன்றி சென்றதற்கே இரண்டு ரவுண்டில் தேர்வாகிவிட்டோமே என்றே யோசித்தேன்.

தொடர்ந்து ஹலோ எஃப்.எம் ஆடிஷனுக்கு செல்லும் முன்பு, முழுமையாக என்னைத் தயார்படுத்தியதில், ஆயிரம் பேரில் முதல் மூன்று இடத்திற்குள் நான் இருந்தும், இறுதியில் தேர்வாகவில்லை. இது மிகப்பெரிய வலியை எனக்குத் தர, நாம் பயணிக்கிற பாதையில் தடைகளே இல்லை என்றால் அது நமக்கான பாதையே இல்லை என என்னைத் தேற்றிக்கொண்டு, எதுக்காக நிராகரிக்கப்படுகிறேன் என்பதை செல்ஃப் அனலைஸ் செய்யத் தொடங்கினேன்.பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளையும் எந்நேரமும் தொடர்ந்து கேட்டபடியே, ஒவ்வொரு எஃப்.எம்மாக தொடர்ந்து முயற்சித்ததில், திருச்சி எஃப்.எம். ஒன்றில் இன்டெனாக என்னை எடுத்துக்கொண்டார்கள். வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்கிற மனநிலையோடு, 8 ஆயிரம் ஊதியத்தில் தொடங்கிய ரேடியோ ஜாக்கி பயணம் என்னுடையது.

விடுமுறையே எடுக்காமல் சூறாவளியாய் சுழன்று, வெறித்தனமாய் வேலை செய்தேன். கோவிட் இடைவெளி, பல ஆர்ஜேக்களை அலுவலகம் வர முடியாத சூழலை உருவாக்க, யார் விடுமுறை என்றாலும், அந்த ஷோ எனக்கானதாய் மாறியது. கிடைத்த வாய்ப்பை விடாமல் பற்றி, அரசியல், சினிமா, பொதுத் தகவல்கள் என எதுவாக இருந்தாலும், எல்லாத்துக்குமான ஆர்.ஜே,வாக மாற, தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை எடுத்து நடத்த, 2 மணி நேரத்தை எனக்கு முதன் முதலாக ஒதுக்கினார்கள். இரண்டே ஆண்டில் ஊதியமும் டபுளாக, எனது ஆர்.ஜே. பயணம் திருச்சி வானொலியில் மூன்றரை ஆண்டுகள் பரிணமித்தது.

என் கல்லூரி நாட்களில் டப்மாஸ், டிக்டாக், மியூஸிக்கலி ஆப்களில் இருந்தே என் கெரியரை நான் தொடங்கினேன் என்பதால், டிக்டாக்கில் அப்போதே ஃபாலோவர்ஸ் அதிகம் இருந்தனர். எனவே ஆர்.ஜே. பணிக்கு நடுவில், மனதை தொடும் சில தகவல்களைப் பேசி, இன்ஸ்டா பேஜில் அப்லோட் செய்ததில், ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஃபாலோவர்ஸ் எனக்கு இருந்தனர். பிறகு அது 2 லட்சம், அடுத்து 2.5 லட்சம் என அதிகரித்து, யுவராணி இன்ஸ்டாவில் எது போட்டாலும் மில்லியன் ஃபாலோவர்ஸ்தான் என்கிற நிலையை விரைவில் எட்டினேன்.

எனக்கான பாப்புலாரிட்டி அதிகரிக்கவே, சில பிரான்ட்ஸ் தங்களின் புராடெக்ட் புரோமஷனுக்காக என்னை அணுகினர். வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும் போது, அவற்றையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன் என்கிற யுவராணி, ஏழ்மையும், வறுமையும் வெற்றியை சந்திக்க தாமதத்தை ஏற்படுத்துமே தவிர, தடையாக ஒருபோதும் இருக்காது’’ என அழுத்தமான வார்த்தைகளை உதிர்த்து, வெற்றிப் படிகளில் அடுத்தடுத்து தான் ஏறியதை புன்னகையுடன் மேலும் விவரித்தார்‘‘என் அடுத்த பயணத்தை வீடியோ ஜாக்கியாக தொடங்கலாம் என நினைத்து, சில பல பிரபல சேனல்களுக்கு விண்ணப்பித்ததில், பெங்களூருவில் இயங்கும் தனியார் யு டியூப் சேனலின் ஃபினான்ஸியல் எஜுகேஷனுக்கான தமிழ் டீமில், நல்ல ஊதியத்துடன் விஜே வேலை கிடைத்தது.

5 உடைகளையாவது கை பையில் வைத்து எடுத்துச் சென்று, மாற்றி மாற்றி அணிந்து, ஒரே நாளில் ஐந்து ஷூட் செய்கிற அளவுக்கு கடுமையான உழைப்பை செலுத்த ஆரம்பித்து, எனக்குப் பிடித்த நடிப்பில், மக்களுக்கு தேவையானதை எஜுகேட் செய்ய ஆரம்பித்தேன். புத்தகங்கள் வழியாக மக்களுக்கான தகவல்களைத் தேடித்தேடி சேகரித்தபடியே எனது மெனக்கெடலை ஓய்வின்றி கொடுக்க ஆரம்பித்ததில் என் வளர்ச்சி வேற லெவலில் எகிறியது.

ஃபினான்ஸியல் எஜுகேஷன் சேனலில் எனது காணொளிக்கான வியூவ்ஸ் 1 மில்லியனையும், சப்ஸ்க்ரைபர்ஸ் 4 லட்சத்தையும் தொட, அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மில்லியனாக அதிகமாகி, இன்று 7 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் எனக்கு இருக்கின்றனர். “ஐ ஆம் பிக் ஃபேன் ஆஃப் யுவர் எனர்ஜி” யுவராணி என எங்கள் சி.இ.ஓ என்னை பாராட்டியதுடன், எனக்கான ஊதியத்தை முதலில் 50 சதவிகிதமும், அடுத்து 75 சதவிகிதமும் அதிகப்படுத்த, இன்று எனக்கான மாத ஊதியம் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.

என் வேலையில் என்ன மாதிரியான ரோலை எடுத்து நான் செய்கிறேன் என்பதே இதில் முக்கியமானது. கூடவே இத்துறையில் போட்டிகள் குறைவு. இந்தப் பாதையை தேர்ந்தெடுப்பவர்களும் குறைவு என்பதால், எனது திறமையை நூறு சதவிகிதமும் இதில் வெளிப்படுத்த முடிகிறது. ஃபினான்ஸ் தொடர்பாய் இன்று என் இமேஜ் என்ன? என் வேல்யூ என்ன என்பதும் எனக்குத் தெரியும். வாழ்க்கையை வாழ்வதற்கு பல வருடங்கள் இருக்கு. ஆனால் வாழ்க்கை மாறுவதற்கு ஒருசில நேரங்கள் மட்டுமே இருக்கு’’ என்கிற யுவராணி, ஃபினான்ஸியல் எஜுகேட்டிங் தமிழ் டீமுக்கான தலைமைப் பொறுப்பில் தற்போது இருக்கிறார்.

அவருக்கு கீழ் 6 ஆங்கர்ஸ், 5 எடிட்டர் பணி செய்கிறார்கள். யுவராணி எங்கு சென்றாலும் அவரை அடையாளம் காண்கிற அளவுக்கு, பலருக்கும் அவரைத் தெரிந்தே இருக்கிறது. நொடிப்பொழுதையும் வீணடிக்காமல், மிகப்பெரிய உழைப்பாளியாய், தன் குடும்ப பாரத்தையும் சேர்த்தே சுமக்கும் யுவராணிக்கு, உழைப்பாளர் தின வாழ்த்துக்களை பதிவு செய்து விடைபெற்றோம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi