புதுடெல்லி: விவோ இந்தியா மற்றும் அதன் இணை நிறுவனங்களில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக சீன நிறுவனம் ரூ.62,476 கோடியை சட்ட விரோதமாக சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. டிசம்பர் 23ம் தேதி விவோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாங்க் ஸ்க்வான் என்ற டெரி, தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா, ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகியோரை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. அவர்கள் மூவரும் அமலாக்கத்துறையின் காவலில் உள்ளனர். ஏற்கனவே,சீன நாட்டை சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில்,‘‘ சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான முறையில் நடவடிக்கை எடுக்க கூடாது என இந்திய அரசை கடுமையாக வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சீன நிறுவனங்கள் சட்டரீதியாக தங்களுடைய உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்கு அரசு முழு உறுதி அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள 2 சீன பிரஜைகளுக்கு தூதரகம் மூலம் உதவி அளிக்கப்படும்’’ என்றார்.