செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24,09,927 ஆகும். மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வருடந்தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், இந்த வருடமும் நாடு தழுவிய வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் செப்டம்பர் மாதம் 19.9.2023 முதல் 23.9.2023 நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 25.9.2023 திங்கள் கிழமை அன்று நடைபெறுகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் அருகில் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாச்சி பணிகள் துறையின் சார்பாக 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்.
இதில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 1,266 அங்கன்வாடி மையங்களில் 22,7913 ஆறு மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.இந்த வைட்டமின் ஏ திரவம் உட்கொள்வதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாடுகளான மாலை கண், வறண்ட தோல், பார்வை குறைபாடு போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன.
எனவே, பெற்றோர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை பணியாளர்களுடன் இணைத்து அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.சற்குணா மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.