காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்தாண்டு முதல் சென்னை மாநகர பேருந்து பயண அட்டை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு சிரமமாக உள்ளதால், சென்னை மாநகர பேருந்து பயண அட்டை தேவைப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று முதல் 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, யுடிஐடி (UDID) அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, கைபேசி, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம் தொலைபேசி எண்: 044-2999 8040 என்ற எண்ணை தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.