சென்னை: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க வரும் 20 முதல் 23ம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்கள் வரும் 20,21,22,23 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த மாவட்டங்களை சார்ந்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தென் சென்னை மாவட்டத்திற்கு தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கே.கே.நகரில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையம், அடையாறு புனித லூயிஸ் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, தேனாம்பேட்டை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி, வட சென்னை மாவட்டத்திற்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடசென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருவொற்றியூரில் உள்ள அன்பாலயா அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி,
அண்ணா நகர் பஸ் டிப்போ அருகில் உள்ள மேரி கிளப் வாலா செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்தி செயற்கை அவயவங்கள் நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இந்த முகாம்களில் கலந்துகொள்ளும் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப் படம், கைப்பேசி, யுடிஐடி அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.