டி20 உலக கோப்பை கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிச் சுற்று போட்டியில் சமோவா – வனுவாட்டு அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்று பேட் செய்த சமோவா 20 ஓவரில் 174 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் டேரியஸ் விஸர் அதிரடியாக 132 ரன் (62 பந்து, 5 பவுண்டரி, 14 சிக்சர்) விளாசினார். கேப்டன் ஜஸ்மத் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய வனுவாட்டு 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. வனுவாட்டு பவுலர் நளின் நிபிகோ வீசிய 15வது ஓவரில் டேரியஸ் விஸர் (28 வயது) 39 ரன் விளாசியது சர்வதேச டி20ல் புதிய உலக சாதனையாக அமைந்தது (6,6,6,1nb 6, 0, 1nb, 7nb, 6). முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), போலார்டு (வெ.இண்டீஸ் 2021), ரோகித், ரிங்கு சிங் (2024), திபேந்திரா (2024), நிகோலஸ் பூரன் (2024) ஆகியோர் தலா 36 ரன் விளாசியதே சாதனையாக இருந்தது.