புதுடெல்லி: கேரளா மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில், அவரது கணவரின் 10 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வரதட்சணைக் கொடுமை காரணமாக, ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, கிரண்குமாருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12.55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2022ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
கேரள மாநிலத்தையே உலுக்கிய இந்த தீர்ப்பு, வரதட்சணை கொடுமைக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பை அடுத்து கிரண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி கிரண்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். முன்னதாக, தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு மீது இரண்டு ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
அவர் தனது மனுவில், ‘விஸ்மயாவின் தற்கொலைக்கு நான் நேரடியாக எவ்வித தொடர்பும் இல்லை; அதற்கான ஆதாரங்களும் இல்லை. தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை. ஊடகங்களின் தொடர் செய்திகளால், நான் பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரது மேல்முறையீட்டு மனு மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை, கிரண்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பரோலில் உள்ள கிரண்குமாருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.