சென்னை: ‘தொலைநோக்கு சிந்தனையாளர்-கலைஞர்’ எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக ‘தொலைநோக்கு சிந்தனையாளர்-கலைஞர்’ எனும் குழுவின் சார்பில் குறும்பட போட்டி நடத்துவது தொடர்பான செய்தி 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த செய்தியில், போட்டிகளுக்கான விண்ணப்பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்போட்டிகளுக்கான கால அவகாசம் 15.1.2024 வரை நீட்டிக்கப்பட்டது.
அதனடிப்படையில் குறும்படங்கள் மற்றும் சுருள் படங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இதனை பார்வையிட்ட குழு, மேற்கூறிய தலைப்பில் குறும்படங்கள் மற்றும் சுருள்படங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இப்போட்டிக்களுக்காக ஏற்கனவே குறும்படங்கள் மற்றும் சுருள் படங்களை அனுப்பிய போட்டியாளர்கள் அப்படங்களை மீண்டும் அனுப்ப தேவையில்லை. புதியதாக கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 31ம் தேதிக்குள் (shortfilmkalaignar100@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.