21.6.2025 – சனி
திருத்தணி முருகன்
திருக்குளம் வலம் வருதல்
திருத்தணி முருகன் கோயிலில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள் திருக்குளத்தை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். திருக்குளத்தின் சுற்றிலும் சென்று, முருகப் பெருமானின் திருவருளைப் பெறுகின்றனர். திருத்தணி முருகன் கோயிலில், தெப்பத் திருவிழாவின்போது, உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சமேதராய் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப் பட்ட தெப்பத்தில் 5 முறை வலம் வருவார். இந்த விழாவின்போது, திருக்குளத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடிவிட்டு, பால், பன்னீர், புஷ்பம், மலர், மயில் காவடிகளுடனும், அலகு குத்தியும் பக்திப் பரவசத்துடன் “அரோகரா’’ என்று முழங்கி, முருகப்பெருமானின் அருளைப் பெறுகின்றனர். இன்று திருத்தணி முருகன் திருக்குளம் வலம் வரும் காட்சி.
22.6.2025 – ஞாயிறு
ஏகாதசி
இந்த ஏகாதசியால் இழந்தது எல்லாம் மறுபடியும் கிடைத்துவிடும். பித்தளை, வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை, ஒரு தட்டின் நடுவில் வைத்து, விளக்கில் நெய் ஊற்றி, திரியிட்டு, தீபம் ஏற்றி, வேதம் கற்றவருக்குத் தானமாகத் தந்தால், ஞானமும் செல்வமும் கிடைக்கும். வழக்கம்போல முதல் நாளாகிய தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்த்து விடவேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பெருமாளை வணங்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலை திருமால் ஆலயத்துக்குச் சென்று வணங்கி வலம் வர வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமாக ஏகாதசியின் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.
23.6.2025 – திங்கள்
பிரதோஷம்
இன்று திங்கள், சந்திரனுக்கு உரிய நாள். அதோடு தேய்பிறையில் வரும் மகாபிரதோஷ நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. எல்லா சிவாலயங் களிலும் நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறும் வேளையில் கலந்துகொண்டு அபிஷேகம் தரிசிப்பதன் மூலமும், திருக்கோயில் வலம் வந்து சிவனை வணங்குவதன் மூலமும் எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். பிரதோஷ வேளையில்தான் ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு, அமரர்களுக்கு அமுதம் அளித்தார். ஆலகால விஷம் போன்ற நம் துன்பங் களைத் துடைத்து, தேவர்களுக்கு அமுதம் தந்தது போல், நமக்கும் நல்வாழ்வைத் தருவார். சைவ சமயத்தில் பிரதோஷம் கொண்டாடு வதைப்போலவே, வைணவ சமயத்தில் பிரதோஷ வேளை நரசிம்ம மூர்த்தி வழிபாட்டுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ வேளையில், பூஜை அறையில், ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, நரசிம்ம மூர்த்தியை உபாசனை செய்பவர்களுக்கு உடனடியாக அவருடைய அருள் கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் பூர்த்தியாகும்.
23.6.2025 – திங்கள்
ஆவுடையார் கோயில் உற்சவம்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும் இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். 1100 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில். எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நிவேதனம் செய்வார்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப்படுவது இங்கு மட்டும்தான். நரியைப் பரியாக்கியது இத்தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இத்தனைச் சிறப்பு பெற்ற ஆவுடையார் கோயிலில் ஆனிப் பெருவிழா திருகொடியேற்றம் இன்று துவக்கம். தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
25.6.2025 – புதன்
அமாவாசை
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம். இதில் ஆனி மாதம் கடைசி மாதம். அதில் வருகின்ற அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள். சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும். கடற்கரை, ஆற்றங்கரை அல்லது நீர்நிலை உள்ள தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களை நினைத்து தில தர்ப்பணம் செய்பவர்களுக்கு எல்லா கிரகங்களும் துணை புரியும். ஆசைகள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். காலதேவனின் 3-ஆவது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே குடும்ப ஒற்றுமை ஓங்கும். காலை வீட்டைத் தூய்மைப்படுத்தி முன்னோர்களை வரவேற்பதற்காக கூடுதல் விளக்கு ஒன்று ஏற்றுங்கள் நேர்மறை சக்திகளை ஆகர்ஷணம் செய்ய புதிய மாவிலைகளை வீட்டின் முன்னால் கட்டுங்கள். புரோகிதரை அழைத்து எள்ளும் நீரும் என தில தர்ப்பணம் செய்யுங்கள். அப்படி இயலாவிட்டால் வாழைக்காய், அரிசி, பருப்பு, தட்சணை என கோயில் குருக்கள் அல்லது புரோகிதருக்கு இல்லை வைதீகர்களுக்கு இல்லை ஒரு வயதானவருக்கு தாருங்கள். இயன்றால் அன்றைக்கு ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.
25.6.2025 – புதன்
திருவள்ளூர் தெப்பம்
திருவள்ளூர், வீரராகவப் பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, ஆனி மாதத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது ஸ்வாமிக்கு முத்தங்கி சேவை நடைபெற்று இரவு கோயில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
27.6.2025 – வெள்ளி
அமிர்த லட்சுமி விரதம்
வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய நாள். பொதுவாகவே வெள்ளிக் கிழமை அன்று மகாலட்சுமியை வணங்கி வழிபாடு நடத்துவது நீங்காத செல்வம் நிறைந்திருக்கும்படியான வாழ்க்கையைத் தரும். வருடத்தில் பல நாட்கள் மகாலட்சுமிக்கு உகந்த விரத நாட்களாக நம்முடைய முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். அதில் ஆனி மாதம் வருகின்ற மகாலட்சுமி விரதத்திற்கு அமிர்த லட்சுமி விரதம் என்று பெயர். அமிர்தம் என்றால் இறப்பில்லாத மருந்து என்று பெயர். சுவைமிக்கது என்று பெயர். “சாவா மருந்து” “மூவா மருந்து” என்று பெயர். மாறாத நிலைக்கு அமிர்தம் என்று பெயர். ஒருவனுக்கு மாறாத, நிலையான, சுவையான வாழ்க்கை கிடைத்தால் அந்த வாழ்க்கைக்கு அமிர்த வாழ்க்கை என்று பெயர். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள் என்பதினாலேயே இந்த அமிர்த லட்சுமி விரதம் மிகச் சிறப்பானது. நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளையும் பெறுவதற்கு சாஸ்திரத்தில் இந்த விரதம் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இந்நாட்களில் வீட்டில் கலசம் வைத்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும். அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயார் சந்நதியில் விளக்கு வைத்து வர வேண்டும். மாலை வீட்டில் விளக்கு வைத்து லட்சுமி சகஸ்ரநாமம், ஸ்ரீ சூக்தம் முதலிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.
27.6.2025 – வெள்ளி
ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராமர் உற்சவம் ஆரம்பம்
ராமநாதபுரம் நகருக்குள் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆனித்திருவிழா விமரிசையானது. ஸ்ரீ ராமபிரான் இலங்கையை அடைவதற்காக சேதுக்கரையில் இருந்து கடலில் பாலம் அமைக்கத் திட்டமிட்டார். வானர சேனைகளுடன் ஸ்ரீராமபிரான் தங்கியிருந்த இடம் திருப்புல்லாணி. இது ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், சேதுக்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு தர்ப்பைப்புல் படுக்கையில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரானை தரிசிக்கலாம். இது ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. ராமநாதபுரத்திலேயே ஸ்ரீ ராமபிரானுக்கு சேதுபதி மன்னர் மற்றொரு கோயில் கட்டினார். அது கோதண்டராமர் கோயில் எனப்படுகிறது. அரண்மனைத் தெருவிலேயே இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் கோதண்டபாணியாக வில்லேந்திய நிலையில் ஸ்ரீ ராமபிரான் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ நரசிம்மர், அனுமன், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்கும், சிவபெருமானுக்கும் தனி சந்நதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் ஆனித்திருவிழா இன்று தொடக்கம்.